எம்.எம்.சில்வெஸ்டர்

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகுதிச் சுற்று ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதுடன் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் பப்புவா நியு கீனியா அணியை ஓமான் அணி எதிர்கொள்ளவுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச் சுற்றில் தலா 4 அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியிடுகின்றன. குழு ஏயில் இலங்கை, அயர்லாந்து,நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

அதேவேளை, குழு பீயில் பங்களாதேஷ், ஓமான்,ஸ்கொட்லாந்து, பப்புவா நியு கீனியா ஆகியன காணப்படுகின்றன. 

தத்தம் குழுக்களில் உள்ள ஒவ்வொரு அணியும் ஏனைய மூன்று அணிகளுடன் தலா ஒரு தடவை மோதவுள்ளதுடன், லீக் சுற்றின் நிறைவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.

2018  ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதின்று சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அணிகளது தரவரிசையின் படி முதல் 8 இடங்களைப் பிடித்த 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றன.  உலக இருபதுக்கு 20 பிரதான சுற்று எதிர்வரும் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தனது முதல் போட்டியில் நமீபிய அணியை எதிர்வரும் 18 ஆம் திகதியன்று போட்டியிடவுள்ளது.

இதனையடுத்து அயர்லாந்து அணியை 20 ஆம் திகதியன்றும், நெதர்லாந்து அணியை 22 ஆம் திகதியன்றும் எதிர்கொள்ளவுள்ளன. 

இலங்கை விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.