'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் அண்டனி நடிப்பில் தயாராகும் 'கொலை' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார்.

'விடியும் முன்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கொலை'. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'ஓ மை கடவுளே' பட புகழ் நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார். 

இவர்களுடன் அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த்தா சங்கர், முரளி ஷர்மா, கிஷோர் குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் 2018-ஆம் ஆண்டில் மிஸ் இந்தியாவாக தேர்வான அழகி மீனாட்சி சவுத்ரி நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார். 

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார்.

கிரைம் வித் எக்சன் திரில்லர் ஜேனரில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து லோட்டஸ் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. 

இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விஜய் அண்டனி படங்களுக்கே உரித்தான, பாமர ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய தலைப்பு என்பதால் 'கொலை'க்கு இணையதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே நடிகை ரித்திகா சிங், விஜய் அண்டனி இயக்கி, கதையின் நாயகனாக நடித்து வரும் ‘பிச்சைக்காரன் 2’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.