எம்.எம்.சில்வெஸ்டர்

5 நாடுகள் பங்கேற்றிருந்த 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சம்பியன்ஷிப் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள கால்பந்தாட்ட அணிகள் இன்றைய தினம் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

1993 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் வரலாற்றில் 2003 ஆம் ஆண்டில் மாத்திரமே இந்தியா அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை.  

இந்தியா 7 தடவைகள் (1993,1997,1999,2005,2009,2011,2015) சம்பியனாகி தெற்காசிய வலய கால்பந்தாட்ட அரங்கில் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. இதில்,  2003 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தொடரை தவிர ஏனைய அனைத்து தொடர்களிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.

மறுமுனையில் நேபாளம் முதல் தடவையாக தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளமை வெகு காலமாக மேற்கொண்டுவந்த முயற்சிக்கு கிடைத்த பலனாகும்.  ஆகவே, இம்முறை எப்படியாவது கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு நேபாள அணி கடுமையாக போராடும்.

மாலைத்தீவின் மாலே நகரிலுள்ள தேசிய கால்பந்தாட்ட அரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் நடப்புச் சம்பியனான மாலைத்தீவு ஆகிய 5 நாடுகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒரு முறை ஏனைய அணிகளுடன் விளையாடியிருந்தன. லீக் சுற்றின் நிறைவில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடத்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கான  தகுதியைப் பெற்றுக்கொண்டன. 

அந்த வகையில், இப்போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஆகியன இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில் இந்தியா 2 வெற்றி, 2 சமநிலைகளுடன் 8 புள்ளிகளை பெற்றது. நேபாளம் 2 வெற்றி, 1 சமநிலையுடன் 7 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. 

இந்தியா சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் 107 ஆவது இடத்திலும் நேபாளம் 168 ஆவது இடத்திலும் உள்ளன.  என்றபோதிலும், இப்போட்டித் தொடரில் நேபாள அணியினர் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் சிறப்பாகவே விளையாடி வருகின்றனர். நேபாள அணியின் முக்கிய வீரரான மனிஷ் டாங்கே இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவார். 

இப்போட்டித் தொடரில் இந்தியா தோல்வியடையாத அணியாக வலம் வருவதுடன், நேபாள அணி ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்திய அணியுடனான போட்டியிலேயே நேபாள அணி தோல்வியைத் தழுவியிருந்த‍மை கவனிக்கத்தக்க விடயமாகும். 

ஆகவே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்து முதல் தடவையாக கிண்ணத்தை உச்சி முகரும் முனைப்பில் நேபாள அணி இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது. மறுமுனையில் லீக் சுற்றில் நேபாளத்தை வென்ற‍து போலவே இறுதிப் போட்டியிலும் வென்று 8 ஆவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றும் வேட்கையில் இந்தியா களமிறங்கவுள்ளது.