இராஜதுரை ஹஷான்

அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக வருட இறுதிக்குள் அந்த அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்யுமாறும், நடுத்தர மக்களுக்கான குடியிருப்பு நிர்மாண செயற்திட்ட  பணிகளை கொழும்புக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் கிராம புறங்களிலும் விரிவுப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 நகர அபிவிருத்தி,திண்ம கழிவகற்றல் மற்றும் சமூக துப்பரவாக்கும் விவகார இராஜாங்க  அமைச்சின் அபிவிருத்தி செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

திறைச்சேரியின் நிதியை சேமிக்கும் வகையிலான முதலீடுகளின் ஊடாக தற்போது வீடமைப்பு அபிவிருத்தி செயற்திட்ட பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட 100 நகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது என தெரிவித்த வீடமைப்பு அமைச்சின் செயலாளர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் 100 நகர அபிவிருத்தி செயற்திட்ட பணிகள் நிறைவு பெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும்  இதன்போது குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 60ஆயிரம் குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 40 ஆயிரம் குடியிருப்புகளையும்,மத்திய மற்றும் ஏனைய தரத்திலானோருக்காக 20ஆயிரம் குடியிருப்புகளையும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

100 நகர அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு இணையாக ஒரு நகரத்தில்100 குடியிருப்புகள் வீதம் 10ஆயிரம் குடியிருப்புகள்   நிர்மாணிக்கப்படும் என  நகர அபிவிருத்தி அதிகார சபையில் தலைவர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் நடைபாதைகளுக்கு அமைவாக அந்த நடைபாதைகளுக்கு அண்மையிலான கிராமிய உற்பத்திகளை சந்தைப்படுத்தும் விற்பனை நிலையங்களை ஸ்தாபிக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என நகர அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெனரல் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.