(எம்.எப்.எம்.பஸீர்)

 உகண்டாவிலிருந்து வருகை தந்த பெண்ணொருவரின் வயிற்றில் கொக்கைன் வில்லைகள்  இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

உகண்டாவிலிருந்து கட்டாரை ஊடறுத்து நேற்று கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானத்தில் இந்த பெண் வருகை தந்துள்ள நிலையில், அவர் கொக்கைன் வில்லைகளை விழுங்கியிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுங்க சட்டப் பிரிவு பணிப்பாளர் சுதத்த சில்வா குறிப்பிட்டார்.

 அந்த பெண் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில், விமான நிலைய வெளியேறல் பகுதியில்  அவரை விசாரித்து, ஸ்கேன் பரிசோதனை செய்த போதே கொக்கைன் வில்லைகள் வயிற்றில் இருப்பது தெரியவந்துள்ளது.

தனது வயிற்றில் சுமார் 100 கொக்கைன் வில்லைகள் இருப்பதாக 45 வயதான அந்த பெண் தெரிவித்துள்ள நிலையில்,  நேற்றிரவாகும் போதும் 51 கொக்கைன்  அடங்கிய வில்லைகளை வெளியில் எடுத்திருந்ததாக சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

ஆரம்பகட்ட விசாரணைகளை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு முன்னெடுக்கும் நிலையில், அப்பெண் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளார்.