உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்  பிரதான சூத்திரதாரியை கண்டறியாமை தேசிய பாதுகாப்பிற்கு பேரச்சுறுத்தல் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 3

15 Oct, 2021 | 09:46 PM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரியைக் கண்டறியாவிட்டால், அது எதிர்வருங்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

எனவே அத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இழுத்தடிப்பின்றி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே நீண்டகாலப்போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள், இப்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசாங்கம் உரியவாறான தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டரை வருடங்கள் கடந்துள்ளன. இருப்பினும் இன்னமும் அத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. இதுகுறித்த விசாரணைகளில் கார்டினலும் கத்தோலிக்க மக்களும் முழுமையாக நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் இலங்கையர்கள் மாத்திரமன்றி, அமெரிக்கா, இத்தாலி உள்ளடங்கலாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமையை அவதானிக்கமுடிகின்றது.

அத்தோடு கத்தோலிக்கத் திருச்சபை இவ்விடயம் தொடர்பான தமது நிலைப்பாட்டை பலமுறை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள்.

எனவே தொடர்ந்தும் இழுத்தடிப்புச்செய்யாமல் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை இத்தாக்குதல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரியைக் கண்டறியாவிட்டால், அது எதிர்வருங்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

மறுபுறம் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படாதபோதிலும், அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டுமக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள்.

அரசாங்கம் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப்பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. அதனுடன் இணைந்ததாக பல்வேறு உணவுப்பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் விரைவில் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என்று அரசாங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை மத்திய வங்கியினால் நாளாந்தம் பெருந்தொகையான பணம் புதிதாக அச்சடிக்கப்படுகின்றது. ஆனால் அதனாலேற்படக்கூடிய பாதிப்பை மக்களே எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

இந்நிலையில் நாட்டைவிட்டுச்செல்லும் நோக்கில் பெருமளவானோர் குடிவரவு, குடியகல்வுத்திணைக்களத்திற்கு முன்னால் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள். இதற்கு அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும்.

அடுத்ததாக எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நட்டஈடு இன்னமும் முழுமையாக வழங்கப்படவில்லை. அதற்குரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுவதுடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தற்போதைய நிலையென்ன என்பது குறித்து நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

அக்கப்பலில் கனிய எண்ணெய் உள்ளடங்கலாக சூழலுக்குத் தீங்கேற்படுத்தக்கூடிய பல்வேறு பதார்த்தங்கள் காணப்பட்டன. நீண்டகாலத்தில் அவற்றால் மிகமோசமான சூழலியல் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்.

எனவே இதுகுறித்து அரசாங்கம் உரியவாறான தெளிவுபடுத்தல்களை வழங்குவது இன்றியமையாததாகும். அதேபோன்று இந்திய மீனவர்கள் இலங்கைக்கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் எமது நாட்டின் மீனவர்கள் நீண்டகாலமாக நெருக்கடிகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.

இதுகுறித்து இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, தீர்வைப்பெற்றுக்கொடுப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே நீண்டகாலப்போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள், இப்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசாங்கம் உரியவாறான தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58