நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைதிட்டமும் இல்லை - அகிலவிராஜ்

By T. Saranya

15 Oct, 2021 | 09:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. உறுதியான கொள்கையும் இல்லை.

அதனால் விரக்தியடைந்திருக்கும் மக்கள் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு நீண்டகாலம் செல்லாது. அதனால் நாட்டை கட்டியெழுப்ப மக்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் கைகோர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் சுகாதாரம், விவசாயம், கல்வி என அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. அரச ஊடகங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல்போயிருக்கின்றது. அதேபோன்று ஆசிரியர்களின் பிரச்சினையை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வுகாண முடியாமல் போயிருக்கின்றது.

கொவிட் மற்றும் ஆசிரியலின் போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி ஒன்றரை வருடத்துக்கு பின்னுக்கு சென்றிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் கண்டுகொள்வதில்லை.

மேலும் கடந்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்து ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்தேன். இதுதொடர்பாக 2018இல் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிவந்தோம்.

2019 இல் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தேன். 202 0இல் இருந்து அவர்களின் கோரிக்கைகயை சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கத்துக்கு அதனை முன்னுக்கொண்டுசெல்ல முடியாமல் போயிருக்கின்றது.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கான பணத்தை  இலாபமீட்டும் நிறுவனங்களுக்கு வட் வரியை அதிகரித்தே பெற்றுக்கொண்டோம். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் வட் வரியை குறைத்து தனவந்தர்களை பாதுகாத்து, அரசாங்கத்துக்கு வாக்களித்த ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துள்ளது.

மேலும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்களின் அன்றாட தேவைகளையாவது பூர்த்தி செய்துகொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். அனால் அரசாங்கத்துக்கு அதனை செய்ய முடியாமல்போயிருக்கின்றது.

பொருட்களின் விலை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது. 2015க்கு முன்னரும் இந்த நிலைமையே இருந்தது. பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாமல்தான்  ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே பொதுத் தேர்தலுக்கு சென்றது.

ஆனால் 2015 இல் ஆட்சிக்கு வந்த நாங்கள், கட்டியெழுப்பு முடியாது என்ற நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுதோம். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தினதும் விலை குறைத்தோம். மக்களுக்கு சுந்தரமாக வாழ்வதற்கு வழிசெய்தோம். எங்களிடம் முறையான வேலைத்திட்டமும் உறுதியான கொள்கையும் இருந்தது. அதனால்தான் இவற்றை செய்யமுடியுமாக இருந்தது.

அதேபோன்று அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வசதியாக டெப் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தாேம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி அதனை இடைநிறுத்தினார். அன்று நாங்கள் மாணவர்களுக்கு டெப் வசதிகளை வழங்குவதற்கு இடமளித்திருந்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்காது.

எனவே நாட்டை கொண்டு செல்வதற்கு அரசாங்கத்திடம் வேலைத்திட்டமும் இல்லை. உறுதியான கொள்கையும் இல்லை. அதனால்தான் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பொருட்களின் விலை அதிகரித்து செல்கின்றது. இந்த நிலையை மக்கள் தொடர்ந்து பொருத்துக்கொண்டு இருக்கப்போவதில்லை.

அதனால் அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு இன்னும் நீண்டகாலம் செல்லாது.  நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டுசெல்ல ஐக்கிய தேசிய கட்சியிடம் முறையான வேவலைத்திட்டமும் உறுதியான கொள்கையும் இருக்கின்றது. அதனால் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியும் கை கோர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right