( எம்.எம்.சில்வெஸ்டர் )

எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 23 வயதுக்குட்டபட்ட ஆசிய கால்பந்தாட்ட கிண்ண தகுதிகாண் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான 33 பேர் கொண்ட இலங்கை உத்தேச குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

23 வயதுக்குட்பட்ட  ஆசிய கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் சிரியா, கட்டார் யேமன் ஆகிய நாடுகளுடன் குழு ஏயில் இலங்கை அங்கம் வகிக்கிறது.

இந்த தகுதிகாண் போட்டித் தொடரில் மொத்தமாக 42 அணிகள் 10 குழுக்களில் போட்டியிடுகின்றன. குழு K யில் இடம்பெற்றிருந்த வட கொரிய  போட்டித் தொடரிலிருந்து விலகிக்கொண்டதையடுத்து 41 நாடுகளின் அணிகளே பங்கேற்கின்றன. இந்த 11 குழுக்களும் அந்தந்த குழுக்களுக்கு  வழங்கப்பட்டுள்ள நாடுகளில் விளையாடவுள்ளன.

அதாவது குழு A கட்டாரிலும், குழு B தஜிகிஸ்தானினும்,குழு C பஹ்ரேனிலும், குழு D குவைட்டிலும், குழு E ஐக்கிய அரபு இராச்சியத்திலும், குழு F ஜோர்தானிலும், குழு H சிங்கப்பூரிலும், குழு I கிர்கிஸ்தானிலும், குழு J மொங்கோலியாவிலும், குழு K ஜப்பானிலும் விளையாடவுள்ளன. இதன்படி A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை,சிரியா, கட்டார், யேமன் என்பன கட்டாரில் விளையாடவுள்ளன.

இந்த 23 ஆசிய கால்பந்தாட்ட கிண்ண தகுதி போட்டிகளில் பங்கேற்பதற்கான இலங்கை குழாம் இன்னும் சில தினங்களில்  கட்டார் நோக்கி பயணமாகவுள்ளது. அங்கு  சில பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி சிறப்பான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு இப்போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இலங்கை 23 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட உத்தேச குழாத்தில் மொஹமட் முஷீட், மொஹமட் ஷக்கீர், உதயங்க பெரேரா, அப்துல் பாசித், ஹசிக்க நவோத, அவிஷ்க கவிந்து, பெத்தும் விமுக்தி, தனஞ்சய டி சில்வா, பதுர்டீன் தஸ்லீம், வரதராஜா ஜெக்சன், மொஹமட் முஸ்பிர்,மரியநேசன் வீரசாந்த், கிஹான் சத்துரங்க, ருமெஷ் மெண்டிஸ், மொஹமட் அமான், ஷிஷான் பிரபுத்த, அவிஷ் தேஷான், சத்துர லக்சான்,ராசா ரூமி, யுவராசா தினூஷன், மொஹமட் குர்ஷீத், சசங்க தில்ஹார, கண்ணன் தனுஷன், பிரயன் வீரப்புலி,டேனியல் மெக்ராத் கோமஸ்,மொஹமட் ஆக்கிப், ரிப்கான் மொஹமட், அசேல மதுஷான், செனால் சந்தேஷ், சபீர் ரசூனியா, மொஹமட் சஜாத், கவின் சுவரின் ஆகிய 33 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த மொஹமட் அமானுல்லாஹ் 23 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி பயிற்றுநராக மொஹமட் ஜெஸ்மின், கோல்காப்பு பயிற்றுநராக சமன் தயாவன்ச, உடற் பயிற்சி பயிற்றுநராக பிரேஸில் நாட்டின் மார்கொஸ் பெரேய்ரா ஆகியோர் செயற்படவுள்ளனர்.