(நா.தனுஜா)

'பன்டோரா பேப்பர்ஸ்' ஆவண வெளிப்படுத்தல்களைத் தொடர்ந்து நிருபமா ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன் ஆகியோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்கவிரும்புவதாகக்கூறி ரஞ்சன் ராமநாயக்க அவரது சட்டத்தரணி ஊடாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கின்றார்.

சுமார் 7 வருடகாலமாக 14 சர்வதேச நிதிநிறுவனங்களிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பினால் கடந்த 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட 'பன்டோரா பேப்பர்ஸ்' என்ற ஆவணத்தில் இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் குறித்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்கு தமது சேவை பெறுநரான ரஞ்சன் ராமநாயக்க விரும்புவதாகவும், எனவே அவர் வாக்குமூலம் வழங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித்தருமாறும்கோரி ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி அஷான் ரிஷி பெர்னாந்துவினால் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் ஈவா வனசுந்தரவிற்கு நேற்று வியாழக்கிழமை கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 4 வருட சிறைத்தண்டனையை அனுபவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.