(எம்.மனோசித்ரா)

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளதன் மூலம் இலங்கைக்கு மாதாந்தம் 800 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும்.

அத்தோடு இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மின்விநியோகத்திற்கான தன்னிச்சையான அதிகாரம் முழுமையாக அமெரிக்கா வசமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமெரிக்க, இந்திய மற்றும் சீன ஆதிக்கங்களிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக போராட வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் அமெரிக்க பிரஜைகளான ராஜபக்ஷாக்கள் அவர்களது தாய்நாட்டுக்கு தப்பிச் சென்று விடுவர். இறுதியில் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் அறிவிக்காமல் தன்னிச்சையாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 10 வருடங்களுக்கு எரிவாயுவினைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும். இது எமது தேவைக்கும் அதிகமான கொள்வனவிற்கு செலுத்தப்படவுள்ள தொகையாகும்.

இந்த வேலைத்திட்டத்தில் 24 மணித்தியாலங்களும் மின் விநியோகத்திற்கான நிபந்தனை உள்ளடக்கப்படவில்லை. மாறாக காலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரையான மின் விநியோகத்திற்கான நிபந்தனையே காணப்படுகிறது. இந்த வேலைத்திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமெரிக்க நிறுவனம் உலகளாவிய ரீதியில் பாரிய பின்னடைவில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தினால் கடந்த 2018 ஆம் ஆண்டு கரீபியன் தீவுகளில் இதே போன்றதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு அதன் போது பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதமாகும் போது இந்த நிறுவனத்தின் கடன் தொகை 1,240 மில்லியன் டொலர் ஆகும். 2020 இல் 945 மில்லியன் டொலராகக் காணப்பட்ட கடன் தொகை ஒரு வருடத்தில் 280 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் கையிருப்பு 360 மில்லியன் டொலர் மாத்திரமேயாகும்.

எனவே இவ்வாறான நிறுவனத்திற்கு கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு 800 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும் என்று மின் பொறியியலாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் ஊடாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்திற்கு மாத்திரமல்ல, களனிதிஸ்ஸ மற்றும் முத்துராஜவெலையில் நிர்மாணிக்கப்படவுள்ள மின்உற்பத்தி நிலையத்திற்கும் இந்த நிறுவனவே எரிவாயுவை விநியோகிக்கும். அவ்வாறு விநியோகித்தால் இலங்கைக்கு 1,500 மில்லியன் டொலர் வரை நஷ்டம் ஏற்படும்.

இலங்கையின் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒன்றுக்கும் அதிக பங்கினை விநியோகிக்கும் தன்னிச்சையான அதிகாரத்தை அமெரிக்காவிற்கு வழங்குவதன் மூலம் தொழிற்சாலைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை இயக்கும் கட்டுப்பாடு கூட அமெரிக்கா வசமாகும்.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்திற்கான சர்வதேச விலை மனு கோரல் கோரப்பட்டிருந்த நிலையிலேயே அவற்றை புறந்தள்ளி இவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவு செயலாளர் நாட்டுக்கு விஜயம் செய்த போது திருகோணமலை எண்ணெய் தாங்கிகளுக்கு முள்ளான் நின்று எடுத்த புகைப்படத்தின் மூலம் இந்தியா இலங்கை மீது பிரயோகிக்கும் அழுத்தமும், உர இறக்குமதி தொடர்பான விவகாரம் தொடர்பில் சீன தூதரகத்தின் கடிதம் மூலம் அதன் அழுத்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தாய் நாட்டை சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குள் உட்படுத்தும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும் என்றார்.