சுமார் ஏழு மாத காலம் நீண்ட வரலாற்றைக் கொண்ட 2021 இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளானது ஒரு வழியாக இன்றைய தினம் நிறைவுக்கு வரவுள்ளது.

டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மகேஹந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முன்பு 2012 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடியது, 

2012 மே 27 அன்று சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கெளதம் கம்பீரின் கொல்கத்தா அணி, தோனியின் சென்னை அணியை வீழ்த்தி முதன் முதலாக சம்பியன் ஆனது.

நடப்பு தொடரில் சென்னை அணியை கொல்கத்தா அணியுடன் ஒப்பிடும்போது டுபாய் மைதானத்தில் 4 ஆட்டங்களில் விளையாடியது அதில் 2 போட்டிகளில் வென்றது. அதேநேரம் கொல்கத்தா 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வென்றது.

கடந்த ஆண்டு உட்பட ஒட்டுமொத்தமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் டுபாயில் நடந்த 11 ஆட்டங்களில் 6 இல் வெற்றியும், கே.கே.ஆர் 5 இல் மூன்று வெற்றியையும் பெற்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 9 ஆவது ஐ.பி.எல். இறுதிப்போட்டி இது. கொல்கத்தா அணிக்கு இது 3 ஆவது இறுதிப்போட்டி. சென்னை அணி 3 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும்  கிண்ணங்களை வென்றுள்ளன.

சி.எஸ்.கே. 3 தொடர்ச்சியான தோல்விகளின் பின்னணியில் நாக் அவுட்டிற்குள் நுழைந்தது ஆனால் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கு முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர்.

மறுபுறம் கே.கே.ஆர். இந்த சீசனில் ஐ.பி.எல். வரலாற்றில் மிகச்சிறந்த மறுபிரவேசம் ஒன்றை செய்துள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் கொவிட் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் இந்தியாவில் விளையாடிய 7 ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியுற்று, புள்ளிகள் அட்டவணையில் 7 ஆவது இடத்தில் இருந்தனர்.

ஆனால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது வீரர்களுக்கு புத்துயிர் அளித்தார். வீரர்கள் சுதந்திரமான மனதுடன் விளையாடுவதற்கும், தங்கள் திறன்களை வெளிப்படுத்தி கொள்வதற்கும் முன்னுரிமையும் வழங்கியதால் கே.கே.ஆரின் நிலை தலை கீழானது. 

பிளே - ஆப் சுற்றுக்கு நுழைந்த கொல்கத்தா வெளியேற்றல் சுற்றில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெளியேற்றினார்கள்.

அதன் பின்னர் இடம்பெற்ற மற்றொரு வெளியேற்றல் சுற்றில் நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்திய அணிகளுள் ஒன்றான டெல்லியை தோற்கடித்து வெளியேற்றினார்கள்.

இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

இது இவ்வாறிருக்க ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டு தலைவர்கள் ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப் போட்டியில் எதிர்கொள்வது இதுவே முதல் முறை. 

2011 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற தோனி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இறுதியாக நடைபெற்ற ஒருநாள் கிண்ணத்தை வெற்றி கொண்ட இங்கிலாந்து அணித் தலைவரான இயன் மோர்கனுக்கு எதிராக போட்டியிடுவார்.

Photo Credit ; IPL