ரிஷாத் 174 நாள் சிறை வாழ்வு நிறைவு - இரு வழக்குகளிலும் நிவாரணம் - முழு விபரம்

By T Yuwaraj

14 Oct, 2021 | 08:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சரும்  தற்போதைய  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் 174 நாள் சிறை வாழ்க்கை நிறைவுக்கு வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீனுக்கு வியாழக்கிழமை (14)  கோட்டை நீதிவான் நீதிமன்றமும், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றமும் பிணையளித்து உத்தரவிட்டது. 

அதன்படியே ரிஷாத் பதியுதீனுக்கு சுமார் 6 மாதங்களை அண்மித்த காலப்பகுதிக்கு பின்னர் வீடு செல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு, அவரது கடவுச் சீட்டு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணை:

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என, கடந்த  ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  ரிஷாத் பதியுதீன் முதலில் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

பின்னர் ஏப்ரல்  27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி  வழங்கிய அனுமதிக்கு அமைய தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந் நிலையிலேயே  தடுப்புக் காவல் விசாரணைகளின் நிறைவில் அவர், பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி  கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவையில்  சந்தேக நபராக ரிஷாத் பதியுதீனை  சி.ஐ.டி.யினர் முன்னிலைப்படுதியிருந்தனர்.

' சினமன் கிராண்ட் தற்கொலைதாரியான இன்சாப் அஹமட்டுக்கு குளோசஸ் எனும் செப்பு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று இருந்தது. அந்த நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி சந்தேக நபர் செப்பு உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியுள்ளார்.

செப்பு தொடர்பிலான உற்பத்திகளில் ஈடுபடும் நிறுவங்களுக்கு, சந்தேக நபர் பதவி வகித்த அமைச்சின் கீழ் இருந்த நிறுவனம் ஊடாக முன்னர் மூலப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

 இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள் முன்னாள் ஜனாதிபதி செயலர் உதய ஆர் செனவிரத்ன ஊடாக வெளியிடப்பட்டுள்ளன.

 எனினும் குளோசஸ் நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி மூலப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது.

 இதற்கான அனுமதியை குறித்த அமைச்சின் மேலதிக செயலராக இருந்த பாலசுப்ரமனியம் என்பவர் வழங்கியுள்ளார். ரிஷாத் பதியுதீனின் தலையீட்டுடன் அது வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கான  நிதி பிரதானமாக குளோசஸ் நிறுவனத்தின் வருமானம் ஊடாகவே பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ' என சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

எனினும் அக்குற்றச்சாட்டுக்களை ரிஷாத் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளதுடன், தன்னை தனது அமைச்சின் மேலதிக செயலர் ஒருவருடன் தொலைபேசியில் கதைத்தமைக்காகவே கைது செய்துள்ளதாக சட்டத்தரணிகள் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார் .

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தனக்கு தொடர்பில்லை எனவும் அவ்வாறு தொடர்பிருப்பதாக எந்த சான்றுகளும் சி.ஐ.டி.யிடம் இல்லை எனவும் அவர் சட்டத்தரணிகள் ஊடாக மன்றுக்கு தெரிவித்திருந்தார்.

 அவ்வாறான நிலையிலேயே,  இந்த விவகாரத்தில் தனக்கு பிணையளிக்குமாறு அவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எழுத்து மூல சமர்ப்பணம் ஒன்றினை முன் வைத்தார்.

அது தொடர்பிலான வாதாங்களை சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழுவினருடன் நேற்று மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன  முன் வைக்க தயாராக இருந்தார்.

 இந் நிலையில் முறைப்பாட்டாளர் தரப்பான சி.ஐ.டி.யினருடன் நேற்று அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் மன்றில் ஆஜரானார்.

 இந் நிலையிலேயே, ரிஷாத் பதியுதீனுக்கு குறித்த விவகாரத்தில் பிணையளிப்பதா இல்லையா எனும் பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 இதன்போது மன்றில்  விடயங்களை தெளிவுபடுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தனது சேவை பெறுநர் ரிஷாத் பதியுதீனுக்கு பிணை கோரி ஏற்கனவே எழுத்து மூல சமர்ப்பணங்களை  கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி மன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதன் பிரதியை முறைப்பாட்டாளர் தரப்புக்கும் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் அதன் பின்னர் வழக்கில் பிணை பெற்றுக்கொள்ள, சட்ட மா அதிபருக்கும் தன்னால் விஷேட ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும்,  ஜனாதிபதி  சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறிப்பிட்டர். அதன்படி விடயங்களை ஆராய்ந்து தனது சேவை பெறுநருக்கு பிணையளிக்குமாறு அவர் கோரினார்.

இதனையடுத்து  மன்றில் ஆஜரான  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன்,  பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ்   இவ்வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவரான ரிஷாத் பதியுதீனுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.

 இந்னையடுத்தே விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிப்பதாக அறிவித்தார்.

' பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் பிரிவின் கீழ் சந்தேக நபர் மன்றில் முன்னிலைபப்டுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  அப்பிரிவின் கீழ் பிணையளிக்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை எனினும், பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ்  சட்ட மா அதிபரின்  இணக்கப்பாடு இருக்குமாயின் பிணையளிக்க முடியும். இங்கு சட்ட மா அதிபரின் இணக்கப்பாடு இருக்கும் நிலையில் பிணையளிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.'  என கோட்டை நீதிவான் அறிவித்தார்.

 அதன்படி 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட ரிஷாத் பதியுதீன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டது.

அத்துடன் ஒவ்வொரு இரு வாரங்களுக்கும் ஒரு முறை ஞாயிறன்று மு.ப. 9.00 மணிக்கும்  நண்பகல் 12.00 மணிக்கும் இடையே சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டு அது தொடர்பிலான வழக்கை எதிர்வரும்  2022 ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது. இவ்வழக்கில் ரிஷாத்துக்கு பிணையாளர்களான மொஹம்மட் பர்ஹான் அமீர்,ஏ.ஜே.எம். பாயிஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 இந்த விவகாரத்தில் ரிஷாத் பதியுதீன் 109 நாட்கள் சி.ஐ.டி.யின் பிடியிலும் 65 நட்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பிலும்  சிறை வைக்கப்பட்டிருந்தார்.

ஹிஷாலினி விவகாரம்:

தனது வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில்,   5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனுக்கு வியாழக்கிழமை (14) பிணையளிக்கப்பட்டது.

முன்னதாக  இந்த விவகாரத்தில் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம், 2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தண்டனை சட்டக் கோவை திருத்தச் சட்டத்தின்  308,358,360 ஆவது அத்தியாயங்களின் கீழ் 18 வயதின் கீழான ஒருவரை அடிமைத் தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை,  துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம்  அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு  கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி  கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா,  ரிஷடஹ்தின் மைத்துனர் கிதர் மொஹம்மட்  சிஹாப்தீன் இஸ்மத் ,  ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில்  ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் ( 5 வது சந்தேக நபர் தொடர்பில் மட்டும் )நேற்று பிற்பகல்  மீளவும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது விசாரணையாளர்களான பொலிஸ் அதிகாரிகளுடன் அரச சட்டவாதி ஹங்ச அபேரத்ன மன்றில் ஆஜரானார்.

 சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் மற்றும் பிரசாத் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

 கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

 இதன்போது மன்றில் விடயங்களை முன் வைத்த அரசின் சட்டவாதி ஹங்ச அபேரத்ன, இந்த விவகாரத்தில் விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும், சி.சி.ரி.வி. கமரா பதிவுகள் அடங்கிய டி.வீ.ஆர் அறிக்கை மற்றும், ஹிஷாலினியின் அறை சுவரிலிருந்த வாக்கியங்களுடன் தொடர்பிலான கையெழுத்து பரிசோதனையின் அறிக்கைகள் அரச இராயன பகுப்பாய்வாளரிடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை என கூறினார். இவ்வாறான நிலையில் 5 ஆவது சந்தேக நபருக்கு பிணையளிப்பதை ஆட்சேபிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

 இந் நிலையிலேயே ரிஷாத் பதியுதீன் சார்பில் கோரப்பட்ட பிணை விண்ணப்பத்துக்கு அனுமதியளிக்கப்பட்டு பிணையளிக்கப்பட்டது.  அதன்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல ரிஷாத் பதியுதீனை மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய அனுமதித்ததுடன் அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்தார்.

 இந்த விவகாரத்தில் ரிஷாத் பதியுதீன் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்ததுடன் அது முதல் நேற்று வரை 38 நட்கள் இந்த விவகாரத்துக்காக விளக்கமறியலில் இருந்தார். இந்த விவகாரம் குறித்த வழக்கு எதிர்வரும் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி மீள  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 13:24:01
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41
news-image

மன்னாரில் பல கிராமங்களைத் தாக்கிய சூறாவளி

2022-12-09 11:51:18