(ஆர்.யசி)

விவசாயத்தின் மீதான அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான போக்கு காரணமாக நாட்டில் விரைவில் உணவுப்பஞ்சம் ஏற்படப்போவதாகவும், அதற்கான ஆரம்ப கட்டத்தில் நாடு பயணிக்கின்றது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

சீனாவின் கடனுக்கும், அதிகாரங்களுக்கும் கட்டுப்பட்டு அரசாங்கம் விவசாயிகளை கைவிட்டுவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணிகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்,

அவர் மேலும் கூறுகையில்,

பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் பாரிய உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, பெரும்பாலான விவசாயிகள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் இருந்து இறக்குமதி செய்த உரம் மண்ணுக்கு உகந்ததல்ல என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் சீனா இதனை மறுத்துள்ளது. 

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தெளிவான பதிலை கூற முடியாதுள்ளது. அரசாங்கத்தின் கீழ் உள்ள விவசாய திணைக்களம் முன்னெடுத்த ஆய்வுகளிலேயே அரசாங்கம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு செயற்படாது விவசாய திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக துணை நிற்பதாக தெரியவில்லை. அதேபோல் சீனாவின் பக்கம் எடுத்துக்கொண்டு மௌனம் காப்பதாகவே வெளிப்படுகின்றது. 

சீன கடன்களுக்கும் அவர்களின் அதிகாரங்களுக்கும் கீழ் படிந்து விவசாயிகளை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேசிய திட்டம் உருவாக்கப்படுவது நல்லதே. ஆனால் இவ்வாறான நெருக்கடி நிலையில் இரசாயன உரங்களை நிறுத்துவதால் விரைவில் நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படப்போகின்றது. 

மக்களுக்கு பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது. இதனை தவிர்க்க முடியாது. இப்போதும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தான் நாட்டின் தேசிய உற்பத்தி முழுமையாக வீழ்ச்சிக்கண்டுள்ளது.

அரசாங்கத்திடம் தெளிவான கொள்கைத்திட்டம் இல்லாதமையே இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணமாகும். இலங்கையில் அரிசி உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமையினால் இப்போது வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் கூறிய கருத்துக்களையும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் பார்த்தால்  இவர்களின் அப்போதைய திட்டம் என்ன என்பது தெரிந்திருக்கும்.

ஒரு பருக்கை அரிசியைக்கூட இறக்குமதி செய்யமாட்டோம் என கூறியவர்கள் இன்று ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்கின்றனர்.  

தேசிய உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு இலகு வேலைத்திட்டங்கள் இருந்தும் அதனை அரசாங்கம் செய்ய தெரியாது நாசமாக்கிக்கொண்டுள்ளது. 

எரிபொருள் விலை அதிகரிக்காது என கூறி இரண்டு மாதங்களுக்கு முன்னர் விலை அதிகரிப்பை செய்தனர். இப்போது மீண்டும் எரிபொருள் அதிகரிக்கப்போகின்றது. 

ஏனைய சகல பொருட்களினதும் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது தொடர்ந்தால் மக்களே ஆட்சியை கவிழ்க்கும் நிலை ஏற்படும் என்றார்.