(எம்.எம்.சில்வெஸ்டர்)

மட்டக்களப்பு கித்துள் நீர்த்தேக்கத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கள விஜய‍மொன்றை கடந்த புதன்கிழமையன்று மேற்கொண்டிருந்தார். 

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் கித்துள் பிரதேசத்தில் உள்ள கித்துள் நீர்த்தேக்கத்தின் அபிவிருத்தி குறித்து இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  கித்துள் நீர்த்தேக்கத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து கண்டறிவதற்காக கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் நீர்ப்பாசன துறை அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த கித்துள் நீர்த்தேக்கம் விஸ்தரிக்கப்படுவதன் காரணமாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மேலும் 18 ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகளில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இந்த கித்துள் நீர்த்தேக்க அபிவிருத்தி பணியால் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை குறித்த குழுவினர் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்தனர்.  

மேலும், பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு அல்லது மாற்றுக் காணிகளை பெற்றுக்கொடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.