இந்தியாவில் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தனியார்  பஸ் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இருந்து சிதாமார்கி நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

குறித்த பஸ் பாசிதா கிராமத்துக்கு அருகே சென்ற போது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த 25 அடி ஆழமான குளத்தில் வீழ்ந்து மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதுபற்றிய தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

எனினும் இக்கோர விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், குறித்த சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.