(எம்.மனோசித்ரா)

பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சகல இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கசார்பற்றதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அத்தோடு திருக்குமார் நடேசன் தொடர்பில் மாத்திரமின்றி, பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பிலும், 2016 இல் சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பன்டோரா ஆவணம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. 

எனினும் பத்திரிகையொன்றில் பன்டோரா ஆவணத்தில் 93 இலங்கையர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒருவருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் ஆலோசனை வழங்கவேண்டும். 

இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு, தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும்.

இதேபோன்று 2016 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் 65 இலங்கையர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. 

இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள பிரபல ஆங்கில பத்திரிகையொன்று 2016.05.10 ஆம் திகதி தகவல்களை வெளியிட்டுள்ளது.

எனவே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களை மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம். 

அதற்கமைய ஒரு நபருக்கு எதிராக மாத்திரமின்றி இவ்வாறு செயற்படும் அனைவருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

இதன்மூலம் எந்தவொரு நபரும் இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை பேண முற்படல் மற்றும் ஊழல் - மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலாக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.