(எம்.மனோசித்ரா)

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வாக 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றுவது பொறுத்தமற்றது. 

எனவே இந்தத் தீர்மானத்தை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் உரப்பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உரப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அவர்கள் இது தொடர்பில் கடிதம் அனுப்புவர். எனவே இரசாயன உரம் குறித்த தீர்மானத்தை சற்று காலம் தாழ்த்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதேபோன்று அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடும் தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று கூறி அவர்களை ஏமாற்றுவது பொறுத்தமானதல்ல. அந்தத் தீர்மானத்தை வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.