(நா.தனுஜா)

ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்குவதற்கு நிதி இல்லை என்று கூறுகின்ற அரசாங்கம், மாகாணசபைத்தேர்தலில் வெற்றியடைவதற்காக 3,972 கோடி ரூபாவை ஒதுக்கி, ஒவ்வொரு பிரதேசங்களிலும் மக்களைத் தமக்குச் சாதகமாகத் திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

அவ்வாறிருக்கையில் ஆசிரியர்களின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி, கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர்களை வற்புறுத்தமுடியாது என்பதையும் அரசாங்கம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலத்தில் அத்தியாவசியப்பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் மக்கள் வாழமுடியாத நாடாக இலங்கை மாறியிருக்கின்றது. அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கெனக்கூறி அரசாங்கம் அவசரகாலச்சட்ட உத்தரவைப் பிறப்பித்தது.

ஆனால் தற்போது அச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றளவிலே அரிசி ஆலை உரிமையாளர்களும் பெருவர்த்தகர்களுமே பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கின்றார்கள். 

நாட்டுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுத்து, அவர்களின் பாதுகாவலனாகத் தொழற்படவேண்டிய அரசாங்கம், பெருவர்த்தகர்களுக்குச் சார்பாக செயற்பட்டு மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. 

அடுத்ததாக 30 ஆயிரம் மெட்ரிக் டொன் பொட்டாசியம் குளோரைட்டு உரம் நாட்டை வந்தடைந்திருக்கின்றது. அதனை சேதனப்பசளை என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறுகின்றார்  எனக் குறிப்பிட்டார்.