(நா.தனுஜா)
அரசாங்கம் மிகவேகமாக மாகாணசபைத் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றது. அரசாங்கத்தின் மீது நாட்டுமக்கள் வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.
ஆனால் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டியதன் அவசியம் என்ன?
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பூர்த்தியடையும்வரை ஏன் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல் இருக்கமுடியாது? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார்.
'எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் தேவைக்கேற்ப அதனைச்செய்யமுடியாது.
இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் கட்டமைப்புக்களின் தேவைகளுக்கு அமைவாக உள்ளக விடயங்களை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கத்தினால் இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்டிருக்கும் உரத்தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள்.
இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதனால் உடற்சுகாதாரத்திற்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனாலேயே அதனை நிறுத்துவதாகக் கூறப்பட்டது. இருப்பினும் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை என்பதே உண்மையான காரணமாகும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பெரும்போகத்திற்குத் தேவையான 30 ஆயிரம் மெட்ரிக் டொன் பொட்டாசியம் குளோரைட் சேதன உரம் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர்கள் யாரை ஏமாற்றுகின்றார்கள்? பொட்டாசியம் குளோரைட்டைப் பயன்படுத்தி சேதன உரத்தைத் தயாரிக்கமுடியாது. பொட்டாசியம் குளோரைட் என்பது ஓர் இரசாயனப்பொருளாகும். அதுமாத்திரமன்றி இந்த உரம் இரவோடிரவாக 8 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
அவ்வாறெனில் அதில் தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயன மற்றும் உலோகப்பதார்த்தங்கள் காணப்படுகின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? இத்தகைய செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அடுத்ததாக அண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் தீங்கேற்படுத்தக்கூடிய எர்வீனியா என்ற பக்றீரியா இருப்பது இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டது.
இருப்பினும் அந்த அறிவிப்பு தவறானது என்று கடந்த வாரம் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
உள்நாட்டுக்கட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவை வலுவிழக்கச்செய்யக்கூடியவகையிலான அத்தகைய அறிக்கையை வெளியிடும் அதிகாரம் வெளிநாட்டுக்கட்டமைப்பிற்கு இருக்கின்றதா?
அது எமது நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அல்லவா அமையும்?
அதுமாத்திரமன்றி அத்தகைய தீங்குவிளைவிக்கக்கூடிய பதார்த்தங்கள் அடங்கிய உரத்தை ஏற்றிய கப்பல் சிங்கப்பூரிலிருந்து மீண்டும் இலங்கையை நெருங்கிக்கொண்டிருப்பதாக எமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே இவ்விவகாரத்தில் மக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவகையில் உரியவாறான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
மறுபுறம் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரப்போவதாகவும் அக்கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாகவும் கூறிய விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர போன்றவர்கள் இப்போது எங்கே சென்றுவிட்டார்கள்?
மேலும் அண்மைக்காலத்தில் அத்தியாவசியப்பொருட்கள் உள்ளடங்கலாகப் பெருமளவான பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படும் நிலையில், அதனைத்தொடர்ந்து பொருட்களின் விலைகள் மீண்டும் உயர்வடையும்.
பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு மேலதிகமாக அண்மையில் அத்தியாவசியப்பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்தல் என்பவற்றுக்காக ஜனாதிபதியினால் அவசரகாலச்சட்ட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்கி, நாட்டை உரியவாறு நிர்வகிக்க முடியாவிட்டால், தகுதிவாய்ந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM