(எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி சிறுபான்மை மக்களுக்கு தங்கள் பிரதேசத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கவேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் சிறுபான்மை மக்கள் எமது நாட்டின் ஆட்சியில் எந்த பங்குதாரர்களும் அல்ல என்ற நிலை ஏற்படும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார்.முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும்  விசாரணைக்குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கை எடுத்தல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமா்வு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  ஆணைக்குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதியரசருமான துலிப் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில்  கலந்துகொண்டு இன நல்லிணகத்துக்கு தனது பரிந்துரைகளை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தவேண்டும்

மாகாணசபை மூலமாகவே சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசத்தை, அவர்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடைக்கின்றது. 
அதனால் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அந்த மக்களும் எமது ஆட்சியில் பங்குதாரர்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அந்த மக்கள் எமது நாட்டின் ஆட்சியில் எந்த பங்குதாரர்களும் அல்ல என்ற நிலை ஏற்படும். ஏனெனில் மத்திய அரசில் சிறுபான்மை மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

 
மாகாணசபை தேர்தலை நடத்தி அந்த பிரதேசங்களில் அவர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அவர்களும் இந்த நாட்டின் பங்குதாரர்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள். அதனால் மாகாணசபை முறைமை நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமாகும் என நாங்கள் தெரிவிக்கின்றோம்.

அரச உயர் பதவிகளுக்கு சிறுபான்மையினர் புறக்கணிப்பு

அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு 26 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த 26 பேரும் சிங்களவர்கள். தமிழ், முஸ்லிம் யாரும் இல்லை. 

உதாரணத்திற்கு வடக்கில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின்  தலைவா் பதவிக்கும்  பெரும்பான்மையினரின் பெயரே காணப்பட்டது. அதேபோன்று  30 அமைச்சுக்களின் செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 

அதில் ஒரே ஒருவா் தமிழர். முஸ்லிம் யாரும் இல்லை.  அப்படியாயின் அந்த மக்கள் எமது நாட்டின் ஒரு பகுதியினர் எனவும் அந்த மக்கள் எமது நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் எவ்வாறு தெரிவிக்க முடியும்.

 

ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக குறிப்பிட்டிருந்தார். அது நல்ல விடயம்.

ஆனால் பூமியில் அவ்வாறான எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. அது நிச்சயமாக இடம்பெறவேண்டும். அதனை மேற்கொள்ள சில விடயங்களை மேற்கொள்ளவேண்டும். 

குறிப்பாக நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களை  விடுவிக்கவேண்டும். கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம் சடலங்களை அடக்குவதற்கான உரிமையை வழங்கவேண்டும். அடக்கம் செய்வதன் மூலம் கொவிட் பரவுவதில்லை என்பது விஞ்ஞான சீதியில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

 
தொண்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கீழ் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்துகின்றன. 


அதனால் இதனை சாதாரண அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டுவர வேண்டும். தொண்டு நிறுவனங்களால் பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதாக தெரிவிக்கின்றனர்.

தொண்டு நிறுவனங்களால் மாத்திரமா பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வது? இந்த தவறு தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினராலும் இடம்பெறுகின்றது.

ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. அதற்காக அனைவரையும் பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் கொண்டுவருகின்றதா?

இதன் மூலம் இலங்கை மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் நாட்டில் இராணுவ செயற்பாடுகள் அதிகரித்திருப்பதான தவறான செய்தி செல்கின்றது. சிவில் சமூகத்தை எந்த நாடும் இராணுவத்துக்கு கீழ் கொண்டுவருவதில்லை. பாதுகாப்பு தொடர்பில் பார்ப்பதாக இருந்தால், அதனை சாதாரண சட்டத்தின் பிரகாரம் பார்க்கவேண்டும்.

நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு இலாகா இல்லை

நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதியும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அதற்கு என பிரத்தியேக அமைச்சு ஒன்று இல்லை. இது மிகப்பெரிய குறையாகும். 


சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதுதொடர்பாக எங்களுடன் கதைத்திருக்கின்றனர். நாட்டில் இன நல்லிணக்கம் மற்றும் சமாதான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தால் நாங்கள் யாரிடம் சொல்லவேண்டும் என அவர்கள் கேட்கின்றனர்.


அதற்கென குறிப்பிட்ட ஒரு இலாகா இல்லை. வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் வெளிவிவகாரம் சம்பந்தப்பட்டதாகும். அங்கு நாட்டின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக கதைக்க முடியாது. அவ்வாறே பாதுகாப்பு அமைச்சுக்கும் முடியாது.


அதனால் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கென தனியாக ஒரு அமைச்சு இருக்கவேண்டும். கடந்த காலங்களிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் நல்லிணக்கம் மற்றும் சமாதான வேலைத்திட்டங்கள் பல அமைச்சுகளுக்கு கீழ் பிரிந்து  இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு இடத்தின் கீழ் இருக்கவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும்

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் சட்டம் இருக்கின்றது. ஆனால் எமது நாட்டில் இந்த சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்வதன்  மூலம் அநீதி ஏற்படுகின்றது.

 
அதாவது ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தடுத்து வைத்துக்கொண்டுதான் அவரக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்களை தேடுகின்றனர். 


சில சந்தர்ப்பங்களில் அந்தத் தகவல்கள் கிடைப்பதில்லை. அப்படியாயின் அவர் ஒருமாதம். ஒருவருடம் என தொடர்ந்து சிறையில் இருக்கவேண்டி வருகின்றது. இது பாரிய அநீதியாகும்.


அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்படுபவர், பிணையில் வரக்கூடியவகையில் முறைமை ஒன்றை அமைக்கவேண்டும். இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சிலர் 20வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். 


அவர்களுக்கு எதிரான குறறச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை இன்னும் தேடிக்கொள்ளவில்லை. அதனால் தகவல்களை தேடிக்கொள்ள முடியாவிட்டால் அந்த கைதிகளை விரைவாக விடுவிக்கவேண்டும்.


காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நம்பகத்தன்மை

காணாமல் போனோர் தொடர்பான  காரியாலயம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதுதொடர்பில் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டும். ஆனால் இன்னும் அதனை சரியாக செய்யவில்லை. 


இந்தக் காரியாலயம ஊடாக காணாமல் போனவர்களின் குடுபங்களுக்கு நிவாரணம் ஒன்றை வழங்க முடியும்.  ஆனால் இது இன்னும் செயற்றிறமை இல்லாமல் இருக்கின்றது.

அத்துடன்  காணாமல் போனோர் தொடர்பான  காரியாலயம் ஒன்றை அமைப்பதாக இருந்தால், அதற்கு நம்பகரமான உறுப்பினர்களை நியமிக்கவேண்டும். அதற்காக அந்தத் துறையில் அனுபவம், திறமையானவர்களை நியமிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அலுவலகம் தொடர்பில் நம்பிக்கை இல்லாமல் போகின்றது.

 
அதனால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த இடத்துக்கு செல்வதில்லை. அதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையானவர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றார்.


ஆணைக்குழுவின் முன் இலங்கை முஸ்லிம் கவுன்சில் உப தலைவர் ஹில்மி அகமட்,  ஓய்வு பெற்ற மெதடிஸ் திருச்சபை ஆயர் ஆசிரி பெரேரா, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா்  பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம், தேசிய சமாதான பேரவையின் தலைவர் கலாநிதி ஜோ வில்லியம், போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி விசாகா தர்மாதாச ஆகிய சமாதான செயற்பாட்டாா்களும் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனா்.