(எம்.மனோசித்ரா)

கிரான்பாஸ் மற்றும் அநுராதபுரம் பொலிஸ் பிரிவுகளில் நேற்று புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிரான்பாஸ் பொலிஸ் பிரிவில் மெத்சந்த உயண தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 52 வயதுடைய கொழும்பு-14 பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 2 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினுடன் 28 வயதுடைய சந்கேநபரொருவர் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.