(ஆர்.யசி)

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து இலங்கையிலும் எரிபொருளுக்கான விலையை அதிகரிக்க கோரி ஐ.ஒ.சி நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன அழுத்தம் கொடுப்பதாகவும், நிதி அமைச்சர் இதற்கு நிவாரணம் வழங்காது போனால் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிக்கும் இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என்றாலும் இந்த வாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும், எனவே நிதி அமைச்சின் முடிவிற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவது குறித்து கடந்த சில தினங்களாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

அமைச்சரவையிலும் இது குறித்து கலந்துரையாடியுள்ள நிலையில் இப்போது ஐ.ஒ.சி நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன எரிபொருள் விலையை அதிகரிக்கக்கோரி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் பெற்றோல் ஒரு லீட்டருக்கு 15 ரூபாவினாலும், டீசல் ஒரு லீட்டர் 25 ரூபாவினாலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில

இது குறித்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் வினவிய போது அவர் கேசரிக்கு கூறுகையில்,

உலக சந்தையில் கனிய எண்ணெய்யின் விலையானது துரித அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் விலை அதிகரிப்பு பற்றி மாத்திரமே ஊடகங்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் உலக சந்தையின் தற்போதைய விலை அதிகரிப்பு குறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லை. மக்களிடம் உண்மைகளை கூறவும் நினைக்கவில்லை. இப்போதுள்ள நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதேநிலையில் இனியும் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது, அரசாங்கம் இதற்கான நிவாரண தொகையை ஒதுக்கினால்  மட்டுமே இப்போது வழங்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்க முடியும். இல்லையேல் நிச்சயமாக விலை அதிகரிப்பை முன்னெடுத்தே ஆக வேண்டும்.

இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்திலும், அதற்கு முன்னர் ஜனாதிபதியின் தலைமையில் விசேடமாக கூடிய ஆலோசனை குழுக் கூட்டத்திலும் எமது தரப்பு நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளேன். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 16 அதிகரித்துள்ளது.

கப்பல் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் பழைய விலையில் இலங்கையில் எரிபொருள் வழங்கினால் மாதம் ஆயிரம் கோடி ரூபா நட்டத்தில் பெற்றோலிய கூட்டுத் தாபனத்தை கொண்டு செல்ல வேண்டிவரும் என்பதை கூறியுள்ளேன்.

அதேபோல் ஐ.ஒ.சி நிறுவன அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடியிருந்தனர், அவர்கள் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளனர்.

குறிப்பாக பெற்றோல் ஒரு லீட்டருக்கு 15 ரூபாவினாலும், டீசல் ஒரு லீட்டர் 25 ரூபாவினாலும் அதிகரிக்க ஆலோசனை முன்வைத்துள்ளனர். அதேபோல் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எனவே நிதி அமைச்சரிடம் கோரிக்கைகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் ஊடாக நிவாரண தொகை ஒதுக்க வேண்டும், அது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இப்போது வரையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இந்த வாரத்தில் இதற்கான தீர்மானம் எடுக்க வேண்டும், நிதி அமைச்சின் முடிவிற்காக காத்திருக்கின்றோம் என்றார்.