அர்ஜுன மகேந்திரன் இல்லாது அவருக்கு எதிரான வழக்கு விசாரணை - சட்ட மா அதிபர் அறிவிப்பு

By T Yuwaraj

13 Oct, 2021 | 09:19 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கி பிணை மோசடி தொடர்பான வழக்கு ( 2015) விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பத்தாவது பிரதிவாதியான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி முன்னெடுத்து செல்ல எதிர்ப்பார்ப்பதாக  மேல் மாகாண முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் இன்று அறிவித்தார்.

அர்ஜுன மகேந்ரனை நாடு கடத்தக் கோரும் விண்ணப்பத்தை தயாரிப்பதற்கான ஆவணங்கள்  சட்ட மா அதிபரால் கையளிப்பு | Virakesari.lk

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறிகள் ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் விஷேட  தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

முதலாவது நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் விசேட மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முதல் பிரதிவாதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும்  10 ஆம் பிரதிவாதி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஜான் புஞ்சிஹேவா தவிற ஏனையோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இலங்கை அரசாங்கம், இராஜதந்திர ரீதியில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லையென இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான குறிப்பிட்டார்.  எவ்வாறாயினும் அந் நடவடிக்கைகள் தொடர்வதாகவும்  அவர் இன்றி வழக்கினை முன்னெடுத்து செல்வதற்கான அனுமதியைப் பெற சாட்சிகளை நெறிப்படுத்த அனுமதியளிக்குமாறும் அவர் கோரினார்.

இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நகர்த்தல் பத்திரத்தினூடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

10 ஆம் பிரதிவாதி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஜான் புஞ்சிஹேவா  மலேஷியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவரை நாட்டுக்கு நாடு கடத்துவது, நாடு கடத்தல் சட்ட விதிமுறைகள் பிரகாரம் சவாலாக உள்ளதாகவும், எனவே அவர் தொடர்பிலும் அவர் இன்றியே வழக்கை  முன்னெடுத்து செல்ல எதிர்ப்பார்ப்பதாகவும்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான கூறினார். அதற்கான சாட்சி நெறிப்படுத்தலுக்கும் அனுமதி கோரப்பட்டது.

 அதன்படி குறித்த இருவரும் இல்லாமல் வழக்கை முன்னெடுத்து செல்வது தொடர்பிலான தீர்மானத்துக்கு வர சாட்சி விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்த நீதிமன்றம் அதுவரை குறித்த வழக்கை ஒத்தி வைத்தது.

இதே வேளை நேற்று வழக்கின் எட்டாவது பிரதிவாதியான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட ரஞ்சித் ஹுலுகல்லே சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, அவரின் சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை நீதிபதிகள் குழாம்  நிராகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right