(எம்.எம்.சில்வெஸ்டர்)

பொருட்களின்  விலைகளில்  பாரிய மாற்றங்கள்  எதுவும் இல்லை . பால் மாவைத் தவிர வேறெந்த பொருட்களினதும் விலைகள் ஏற்றபடவும் இல்லை என தெரிவித்த அத்தியவசிய உணவு பொருட்களின்  இறக்குமதியாளர்களினதும் வியாபாரிகளினதும் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நிஹால் செனவீரட்ண, இறக்குமதிக்கு  தேவையான டொலரை பெற்றுத்தரும்படி  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிடுகையில்,

கேள்வி:  நாட்டில் டொலர் கையிருப்பு ‍குறைவாக காணப்படுகின்ற நிலையில் வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்யவதில் சிக்கல் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், நாட்டில் தற்போது கையிருப்பில் காணப்படும்  பொருட்கள் போதுமானதா ?

பதில்: நாட்டில் தற்போது  இறக்குமதிப் பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை. சகல பொருட்களும் போதியளவில் காணப்படுகிறன. டொலர் கையிருப்பு குறைவாகவே காணப்படுகிறது. எமது இறக்குமதிக்கு  தேவையான டொலரை பெற்றுத்தரும்படி நாம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளோம். 

அவை பெற்றுத்தந்ததன் பின்னர் எந்தவொரு பிரச்சினையுமின்றி இறக்குமதி செய்யப்படும் பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். எவ்வாறாயினும், தற்போது எந்தவொரு பிரச்சினையும் இல்லாது நுகர்வோருக்கு தேவையான அளவு பொருட்கள் உள்ளன. அவற்றுக்கு எந்தவொரு தட்டுப்பாடுமில்லை.

மேலும், பொருட்களில் விலைகளில் பெரிய மாற்றங்கள் இல்லை. பால் மாவைத் தவிர வேறெந்த பொருட்களினதும் விலை ஏற்றப்பட்டவில்லை. 

கேள்வி:பால்மாவைத் தவிர வேறேந்த பொருட்களும் விலையேற்றம் செய்யப்படவில்லை என குறிப்பிட்டிர்கள். ஆனால், கீரி சம்பா, நாட்டரிசி போன்றவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது? இதற்கு என்ன காரணம்?

பதில்: அவை உள்நாட்டு உற்பத்திகள். உள்நாட்டில் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றை அரிசி ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்து சந்தைப்படுத்துகின்றனர். அதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவற்றின் விலையை நாம் தீர்மானிப்பதில்லை. நாம் இறக்குமதியாளர்கள் மாத்திரமே. 

மேலும், தற்போது  அரசாங்கம் மாத்திரமே அரிசி வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தனியார்  துறையினருக்கு அனுமதி கொடுத்தால், இறக்குமதி செய்து குறைந்த விலைகளில் கொடுக்க முடியும். 

கேள்வி: வாரத்துக்கு எத்தனை கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன? 

பதில் :வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு கப்பல்கள் வரும். அவை சீனா, அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும்  ஏனைய நாடுகளிலிருந்தும் கப்பல்கள்  வரும். எனினும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்படுவதால் கப்பல்கள் வருவதிலும் கால தாமதம் ஏற்படுகின்றது. 

இது போன்ற பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே நாம் இந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், கொரோனா பிரச்சினையின் காரணமாக கப்பல் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவையும் எமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பெரும் செலவை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான நிலையிலேயே,  எமக்கு பொருட்களை வெளிநாட்டிலிருந்து வழங்குவோரிடமிருந்து நாம் கடனடிப்படையில் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றோம். மேலும், கடன் அடிப்படையில் பெற்றுக்கொண்ட பொருட்களுக்கான பணத்தை குறித்த திகதிக்குள் வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவை தவறினால், எம்மால் மீண்டும் இறக்குமதி செய்வதற்கு முடியாத சூழ்நிலை ஏற்படும். 

இவ்வாறு எமக்குள்ள நடைமுறை சிக்கல்களையும், பிரச்சினைகளையும் வர்த்தக அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆகவே, இவ்விடயம் குறித்து அரசாங்கம் எமக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். அரசாங்கம் தீர்வொன்றை தந்தால், பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவாது. அவ்வாறு தட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், விலையேற்றம் ஏற்படாது. 

கேள்வி : அரசாங்கத்தமைிருந்து எதிர்பார்க்கும் தீர்வு என்ன?

பதில் : மிகப் பிரதானமாக தேவைப்படுவது டொலர்தான். அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதமொன்றுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இதனை நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அவர்கள் மத்திய வங்கிய் ஊடாக அதற்கான  டொலர் தொகையை பெற்றுக்கொடுத்தால் எந்தவொரு பிரச்சினையுமின்றி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு மக்களுக்கு பொருட்களை வழங்க முடியும்.