புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்ட் மன்ற உறுப்பினர், 1,381 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், 2,901 ஊராட்சி தலைவர், 22,681 ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு ஒக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 

மொத்தம் உள்ள 27,003 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 80,889 பேர் போட்டியிட்டனர்.

இதனுடன் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் என 789 இடங்களுக்கு ஒரே கட்டமாக ஒக்டோபர் 9 திகதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் 9 மாவட்டங்களில் 2,255 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 119 ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மொத்தம் 2,981 பெயர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி நிர்வாகத்தில் 347 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 18 ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 365 பேர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 6ஆம் திகதியன்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 9 மாவட்டங்களில் 77.43 சதவீத வாக்குப் பதிவும், ஒக்டோபர் 9ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 

ஒன்பது மாவட்டங்களை தவிர மீதமுள்ள 28 மாவட்டங்களில் நடைபெற்ற காலியாக இருந்த பதவிக்காக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஒக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில்  இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஒக்டோபர் 12ஆம் திகதி காலை 8 மணி அளவில் தொடங்கின. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விரிவாக ஏற்பாடு செய்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கையின் ஈடுபடும் ஊழியர்களும், வேட்பாளர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர். 

அத்துடன் வாக்கு எண்ணிக்கைத் தொடர்பான பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கமெராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கு குறைவான வாக்குகள் என்பதால் அவை உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அரசியல் கட்சியின் சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

அதிமுக கூட்டணியில் அதிமுக, பாஜக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிட்டன.

இதில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக 129, காங்கிரஸ்  5, மதிமுக 1, விடுதலை சிறுத்தைகள் 1 என திமுக கூட்டணி அதிக அளவில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. 

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக 906, காங்கிரஸ் 35, மதிமுக 11, விடுதலை சிறுத்தைகள் 12,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும், திமுக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சைகள் மூன்று இடத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இரண்டு இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 193 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 

இந்த கூட்டணியை சேர்ந்த பாஜக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 7 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் 42 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 

தேமுதிக ஒரு இடத்திலும், அமமுக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகள் 87 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

இதன்மூலம் 9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

இருப்பினும்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிதொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெற்றிப்பெற்றவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. 

இதுவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருப்பதாகவும், தொடர்ந்து அந்த கூட்டணி முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அனைத்து முடிவுகளும் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.