வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை வாபஸ் : பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியம் தெரிவிப்பு

Published By: Gayathri

13 Oct, 2021 | 08:59 PM
image

(நா.தனுஜா)

பதினொரு பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை இழந்திருக்கின்றோம் என்று காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பேரனைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தமை தொடர்பில் சுட்டிக்காட்டிய காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிட்டோ பெர்னாண்டோ,

'அந்தப் புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தன. ஆனால் இலங்கையில் ஆயிரக்கணக்கான பேரன்களும் பேத்திகளும் தமது பாட்டனாரையும் தந்தையையும் பலகாலமாகப் பார்க்கமுடியாத துர்பாக்கிய நிலையில் இருக்கின்றார்கள். அதனையும் நாம் ஜனாதிபதிக்கு நினைவுறுத்த விரும்புகின்றோம்' என்றும் குறிப்பிட்டார்.

2008 - 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சட்டமா அதிபரின் இத்தீர்மானம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதனால் இதுபற்றி உரியவாறு விசாரணைகளை மேற்கொள்ளுமாறுகோரி, காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டுக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது.

அதேவேளை தனக்கெதிரான வழக்கை தள்ளுபடிசெய்யுமாறுகோரி வசந்த கரன்னாகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பான தமது தரப்பு நியாயங்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியம் மற்றும் மக்களுக்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் கூட்டாக கொழும்பில் இன்றை தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அதன் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு, 11 பேர் காணாமலாக்கப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று ஏற்கனவே கூறியிருந்தது.

அதுமாத்திரமன்றி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபரினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கு முதல்நாள் இடம்பெற்ற சம்பவங்களும் இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.

மேற்குறிப்பிட்டவாறு காணாமலாக்கப்பட்ட 11 பேரில் மூவரின் தாய்மார் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர். எண்மரின் பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலும், தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகத் தொடர்ந்தும் காத்திருக்கின்றனர். 

இருப்பினும் இவ்வழக்கின் தற்போதைய போக்கை அவதானிக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை இழந்திருக்கின்றோம். இவ்விவகாரத்தில் நீதியை வழங்குவதற்குக் கடந்த அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன.

ஜெனீவா கூட்டத்தொடரின்போது மாத்திரம் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் உள்ளகப்பொறிமுறை மூலம் விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதாக சர்வதேசத்திடம் கூறுகின்ற அரசாங்கம், 'பாதுகாப்புப்படையினருக்குப் பாதிப்பையேற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம்' என்று உள்நாட்டில் கூறுகின்றது. 

எனவே அத்தகைய அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு நீதியை எதிர்பார்க்கமுடியும்? 

எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் 15 - 20 வருடங்களுக்கு ஒருமுறை கலவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் அனைத்துத்தரப்பினரும் வீதிகளில் இறங்கிப்போராடி வருகின்றார்கள். 

எனவே எமது பிரச்சினைக்குத் தீர்வைப்பெற்றுத்தராவிட்டால், நாங்களும் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்கமாட்டோம் என்பதைப் பதிவுசெய்யவிரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட மக்களுக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி அச்சலா செனெவிரத்ன, 

'பலவருடகாலமாக வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் இடம்பெற்றுவந்திருக்கின்றன. இருப்பினும் அவற்றுக்கான நீதியை நிலைநாட்டுதல் என்பது தொடர்ந்தும் இழுத்தடிப்புச்செய்யப்பட்டு வருகின்றது. 

11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக இந்நாட்டின் பிரஜை என்றவகையில் போராடி வருகின்றோம். 

இருப்பினும் அந்த நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை நாம் இழந்திருப்பதுடன் மிகவும் களைப்படைந்திருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

அதேவேளை கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 பேரில் இருவரின் தாய்மார் மேற்படி ஊடகசந்திப்பில் கருத்து வெளியிட்டனர்.

இவ்விவகாரத்தில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட தொடர்புபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும், அவருக்கெதிரான குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கடும் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய அவர்கள், தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான ஜெனீவாவிற்கும் அதனைத்தாண்டி எந்தவொரு எல்லைக்கும் செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15