(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள்  எதிர்காலத்திலும் தொடரும் என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்தார்.

ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இன்று பதில் பதுகாப்பு படைகளின் அலுவலக பிரதானியும் இராணுவத் தளபதியுமான  ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்த பின்னர், அவருடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை – அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பாக இரு நாடுகளினதும் இராணுவத் தளபதிகளும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பின்னர் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்த விடயங்களிலிருந்து தெரியவந்தது.

இன்று காலை இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வாவை சந்தித்த பின்னர் இருவரும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்துவதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அது மாற்றப்பட்டு, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு சிறு கருத்து தெரிவிப்பு மற்றும் இடம்பெற்றது. இதன்போது கேள்விகளை தொடுப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை.

பெருமளவிளான ஊடகவியலாளர்கள், இராணுவ தலைமையகத்தில் கூடியிருந்த நிலையில், இரு தரப்பு  கலந்துரையாடலைத் தொடர்ந்து, இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வாவுடன் இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே ஊடகவியலாளர்கள் இருந்த இடம் நோக்கி வந்து கருத்து வெளியிட்டார்.

இதன்போது இராணுவத் தளபதிஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானேவின் தூதுக் குழுவில்  உள்ளடங்கியிருந்த  இந்திய இராணுவத்தின் பயிற்சிகள் தொடர்பிலான கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால்  ரஜீவ் தாப்பர், இந்திய இராணுவத் தளபதியின் செயலரான  மேஜர் ஜெனரால் விக்ராந் நாயக்,  கேர்ணல் மந்தீப் சிங் தில்லொன் உள்ளிட்டோரும் அங்கு பிரசன்னமாகினர்.

இதன்போது,  ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே முதிர்ச்சியடைந்த இரண்டு ஜனநாயக நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நிலவும் சிறந்த உறவுக்கு நிகரான உறவு இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலும் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா மகத்தான வரவேற்பை தனக்கு வழங்கியதாக இதன்போது குறிப்பிட்ட அவர்,  தற்போதைய தனது பதவி நிலையில் தான் இலங்கைக்கு வரும் முதலாவது சந்தர்ப்பம் இது என நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்துடன் தனக்கு மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இந்திய இராணுவங்களிடையே மிக நெருக்கமான பரஸ்பர  இரணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படும் நிலையில், எதிர்க்காலத்திலும் அது தொடரும் என ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே குறிப்பிட்டார்.

இதன்போது அதன் ஒரு அங்கமாக தற்போதும் அம்பாறை மற்றும் மாதுரு ஓயாவில் இடம்பெறும் ' மித்ர சக்தி' கூட்டு பயிற்சிகளை நினைவு கூர்ந்த அவர்,  அப்பயிற்கிகள் தொடர்பிலான இறுதிக் கட்ட நிகழ்வுகளிலும் தான் பங்கேற்க எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

அத்துடன்  இலங்கை இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும், ஜெனரல் சவேந்ர சில்வாவின் தலைமையில்  கொவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக  அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் கால்ப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமரையும் மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளதாகவும் அதே நேரம் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே  உள்ளிட்ட தூதுக் குழுவை, சம்பிரதாயபூர்வமாக வரவேற்று, இரு நாடுகளுக்கும்  இடையே நிலவும் சுமுக இராணுவ தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது  தொடர்பில் கலந்துரையாடியதாக ஜெனரல் சவேந்ர சில்வா கூறினார்.

வரலாறு நெடுகிலும் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா  பயிற்சி உள்ளிட்ட பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும், இலங்கை இராணுவத்தில் பல அதிகாரிகள் இந்திய இராணுவ கல்லூரிகளில் பயிற்றப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் சவேந்ர சில்வா ஞாமகமூட்டினார்.

இவ்வாறான நிலையில்  இலங்கை இராணுவத்தின் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் மரியாதி அணிவகுப்பிலும், மித்ர சக்தி கூட்டுப் பயிற்சிகள் தொடர்பிலான நிகழ்விலும் இந்திய இராணுவ படைகளின் பிரதானியுடன் இணைந்து பங்கேற்கவுள்ளதாக ஜெனரல் சவேந்ர சில்வா குறிப்பிட்டார்.