(ஆர்.யசி)

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாது மீனவர்களை வன்முறைக்கு தூண்டும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன், கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீன்பிடி சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துகின்றார்.

யாழ்ப்பணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

வட பகுதியில் மீனவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் நிலைமைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளன. இழுவைப்படகுகள் மூலமாக எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதையும், அதன் மூலமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும், பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்த நாட்களில் இருந்து இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த இழுவைப்படகு மீன்பிடி முறைமை எமது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை கொடுக்கும். எமது நீண்டகால கடல் வளத்தை அழித்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம், குறித்த இழுவை மீன்பிடி முறைமையை தடைசெய்ய வேண்டும் என்பதே எமது மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது, இதற்கு இரண்டு பாராளுமன்றங்களுக்கு முன்னதாகவே தனிநபர் சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து இழுவை படகு முறையை நிறுத்தும் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியிருந்தேன். அதனை அப்போது நிறைவேற்ற முடியவில்லை, கடந்த பாராளுமன்றத்தில் அதனை கொண்டு வந்து இந்திய தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். அதே சந்தர்ப்பத்தில் எனது தனி நபர் சட்டமூலத்தை அரசாங்கம் ஏற்று அரசாங்க சட்டமூலமாக கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதேபோல் இந்த முறைமையில் மீன்பிடியை ஈடுபட்டால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட வேளையில் இந்தியா அவர்களின் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அதன் மூலமாக இந்திய மீனவர்களின் வருகை முழுமையாக தடுக்கப்பட்டது. எனினும் கடலில் எல்லைக்கோடு போடா முடியாது என்பது யதார்த்தம், எனவே அவ்வாறு எல்லை மீறுபவர்களுக்கு பாரிய தண்டனை கொடுக்கப்படவில்லை, படகுகள் பறிமுதல் செய்தாலும் காலப்போக்கில் அவையும் வழங்கப்பட்டது. எனவே இலங்கை எதனையும் செய்யாது என்ற நோக்கத்தில் அவர்கள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர்.

இந்த செயற்பாடுகளை தடுக்க அரசாங்கத்தின் கையில் பாரிய ஆயுதத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம், ஆகவே இந்த சட்டத்தை அமுல்படுத்தினால் அவர்கள் இலங்கை எல்லைக்கும் வர மாட்டார்கள். ஆகவே மிகுந்த சிரமத்துடன் இந்திய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்று வடக்கை சேர்ந்த ஒருவரே மீன்பிடித்துறை அமைச்சராகவும் இருக்கின்ற நிலையில் இந்த சட்டத்தை அமுல்படுத்த முடியும். இது முற்றுமுழுதாக மீன்பிடித்துறை அமைச்சரின் கையில் இருக்கும் விடையாகும். அவர் இதனை நடைமுறைப்படுத்த மறுக்கின்றார். மீனவர்களுக்கு மோசமான அறிவுரையை கொடுத்து எமது மீனவர்களை வன்செயலில் ஈடுபடுமாறு ஒரு அமைச்சர் அறிவித்துள்ளார். மிகவும் பொறுப்பற்ற முறையில் வன்முறையில் எமது மீனவர்களை தூண்டுள்ளார். எனினும் எமது மீனவர்கள்  வன்முறையில் இறங்கக்கூடாது, மீன்பிடித்துறை அமைச்சருக்கு தெரிந்தது அடிதடி மட்டுமேயாகும். ஆகவே அவர் வன்முறையை தூண்டுகின்றார் என்பதற்காக  மீனவர்கள் வன்முறையில் இறங்க வேண்டாம், இது மீனவர்களுக்கே பிரச்சினையாக அமையும்.

ஆகவே அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கடலில் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். எதிர்வரும் 17ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையிலும் படகுகளியே நாம் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம். இது எமது மீன்பிடி அமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, இந்த சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்ற காரணத்தை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தவுள்ளோம். அமைச்சர் பழைய நினைப்புகளில் இருந்து மக்களை வன்முறைக்கு தூண்டும் செயலை நிறுத்தி நாம் உருவாக்கிக்கொடுத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளோம். இது அரசியில் காரணிகள் அல்ல மக்களின் வாழ்வாதார பிரச்சினையாகும். இதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.