(எம்.எம்.சில்வெஸ்டர்)
மாலைத்தீவின் மாலே நகரில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் முதலிரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மாலைத்தீவு, நேபாளம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் நடப்புச் சம்பியனான மாலைத்தீவு அணியும், நேபாள அணியும் தலா 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் தலா 6 புள்ளிகளைப் பெற்று முதலிரண்டு இடங்களில் உள்ளன.
மூன்றாவது இடத்திலுள்ள இந்தியா ஒரு வெற்றி, 2 சமநிலையுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பங்ளோதேஷ் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு சமநிலையுடன் 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகள் விளையாடியுள்ளதுடன், நாளைய தினம் தத்தமது கடைசிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
இப்போட்டித் தொடரில் நாளைய தினம் தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
நாளை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை நேபாள அணி எதிர்கொள்ளவுள்ளது.
இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாவது போட்டியில் மாலைத்தீவு அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகளுக்கிடையிலான போட்டியில் நேபாள அணி வெற்றி பெற்றாலோ அல்லது சமநிலையில் முடித்துக்கொண்டாலோ இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும்.
மாறாக பங்களாதேஷ் வெற்றி பெற்றால் நேரடியாக பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதேவேளை, இந்தியா மற்றும் மாலைத்தீவு அணிகளுக்கிடையிலான போட்டியில் மாலைத்தீவு வெற்றி பெற்றாலோ அல்லது சமநிலையில் முடித்துக்கொண்டாலோ நேரடியாகவே இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
மறுபுறத்தில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழையும். மாறாக தோல்வியடைந்தால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறாது.
இந்நிலையில், இலங்கை அணி லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ளது.
இதில் இலங்கை விளையாடி நான்கு போட்டிகளில் மூன்று தோல்வி, ஒரு சமநிலையுடன் ஒரு புள்ளியை பெற்றுக்கொண்டது.
இப்போட்டித் தொடரில் இலங்கையின் போட்டி முடிவுகள் திருப்தி அடையச் செய்யாவிடினும், இலங்கை அணி விளையாடிய விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
