(எம்.மனோசித்ரா)

உரப்பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய இந்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரத்தினை விநியோகிப்பதற்கான பொறிமுறை குறித்து விவசாயத்துறை அமைச்சரால் நாளை அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்றைய தினம் வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

உரப்பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டது. இரசாயன உர இறக்குமதியை இடை நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி திடீரென தீர்மானிக்கவில்லை. சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமையவே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய இந்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரத்தினை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே ஊடகவியலாளர் சந்திப்பில் உர விநியோகத்திற்கான புதிய பொறிமுறை குறித்து அறிவிப்பார்.

ஆளுந்தரப்பின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் உரம் தொடர்பான பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். 

இதனை அரசாங்கத்திற்குள் முரண்பாடாகக் காண்பிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இது தவறானதாகும். விவசாயத்துறை அமைச்சர், விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர்கள் என உரிய தரப்பினரால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

சீனா உரம் இறக்குமதி இடை நிறுத்தப்பட்டமையை இராஜதந்திர முரண்பாடாகக் சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. அவ்வாறு எந்தவொரு இராஜதந்திர முரண்பாடும் கிடையாது. 

இது நாட்டு மக்களின் சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். எனினும் இது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையே ஜனநாயகம் என்று கூறுகின்றோம் என்றார்.