(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டு அரசாங்கம் மகிழ்ச்சியடையவில்லை. கொவிட் தாக்கத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கூடிய விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு விற்க விரும்புவதில்லை. வெகுவிரைவில் தற்போதைய நிலைமை சீராக்கப்படும். மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு விருப்பத்துக்குரியதல்ல.கொவிட் தாக்கத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது மகிழ்ச்சியடையும் தரப்பினர் நாங்கள் அல்ல. இருப்பினும் கொவிட் தாக்கத்தினை தொடர்ந்து உற்பத்திகள் குறைவடைந்துள்ளன. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உலகளாவிய மட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறக்குமதி சேவை துறையின் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு விற்பதற்கு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரானதும் பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் .

ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரினால் மாகாண சபை நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு முரண்.மாகண சபை தேர்தல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரது யோசனைகளையும் பெற்று மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மாகாண சபை தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகித்ததாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.என்றார்.