செப்டெம்பர் 15  'ஒக்கஸ்' உன்படிக்கையின் கீழ் அமெரிக்காவிடமிருந்தும் ஐக்கிய இராச்சியத்திடமிருந்தும் அணுசக்தி நீர்மூழ்கிகளை அவுஸ்திரேலியா பெறும்.

 ஸ்ரான்லி ஜொனி

கடந்த ஜூலை மாத முற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை வாபஸ் பெறுவதை அமெரிக்கா துரிதப்படுத்திக்கொண்டிருந்தபோது ஜனாதிபதி ஜோ பைடன் "அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு போகவில்லை" என்று சொன்னார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் அதன் மூலோபாய இலக்குகளை - ஒசாமா பின் லேடனை நீதியின் முன் நிறுத்துவதும் அல் கைதா வலையமைப்புக்களை சீர்குலைப்பதும் - அடைந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளின் இறுதி நாளான ஆகஸ்ட் 31 பைடன் இன்னொரு அறிக்கையை வெளியிட்டு தலிபான்களின் விரைவான வெற்றிக்கு வழிவகுத்த படை வாபஸை நியாயப்படுத்தினார்.அமெரிக்கத் துருப்புக்களை காலவரையயையின்றி ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வைத்திருப்பது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு உதவாது என்றும் அவர் வாதிட்டார். பைடனின் நிலைப்பாட்டின் படி மற்றைய நாடுகளை மாற்றியமைக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யுகம் முடிவுக்கு வந்துவிட்டது.

நடைமுறைச்சாத்திய யதார்த்தவாதம்

வெளியுறவுக்கொள்கையில் பல தசாப்த கால அனுபவத்தைக்கொண்ட பழம்பெரும் ஜனநாயக கட்சிக்காரரான பைடன் ஆட்சி மாற்றங்களைச் செய்வதற்காக அமெரிக்கா முன்னெடுத்த போர்களின் ஒரு ஆதரவாளராக இருந்து வந்திருக்கிறார்.

ஒரு செனட்டர் என்ற வகையில் பைடன் 2003 ஈராக் படையெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தார். 2011 லிபியா மீது படையெடுத்த ஒபாமா நிருவாகத்தில் அவர்  துணை ஜனாதிபதியாக இருந்தார். ஆனால், இப்போது பைடன் தனக்கு முன்னர் பதவியில் இருந்த ஜனாதிபதிகளின் தாராள சர்வதேசியவாதத்தில் (Liberal internationalism) இருந்து தன்னை தூரவிலக்குகின்றார். அதாவது ஒரு வகையில் அவர் டொனால்ட் ட்ரம்பின் மூலோபாயத் தயக்கப்போக்கை பின்பற்றுகிறார். பல தசாப்தங்களில் புதிய போர் ஒன்றை ஆரம்பிக்காத முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பேயாவார். அவர்தான் சீனா மீது வாணிப வரிகளை விதித்து பதற்றநிலையைத் தோற்றுவித்தவர்; அத்துடன் அவர்தான் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி படைவிலகல் இணக்கப்பாட்டை எட்டியவர். ட்ரம்ப் அமெரிக்காவின் தலையீட்டு போக்குகளை கட்டுப்படுத்தி வெளியுறவு கொள்கையை சீனா நோக்கி திருப்பிய அதேவேளை, அவரது அணுகுமுறை பெருமளவுக்கு முரண்பாடுகளுடனான கொடுக்கல் வாங்கலாக (Transactional and with contradictions) இருந்தது.காலநிலை மாற்றத்தைத் தவிர, பைடன் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை தீர்மானங்களில் வேறு ஒன்றையும் ரத்துச்செய்யவில்லை.மேலும் சரியாகக்கூறுவதானால், ட்ரம்ப் தொடங்கியதற்கு(அதாவது சீனாவுடனான புவிசார் அரசியல்  போட்டிக்கு) நடைமுறைச் சாத்தியமான யதார்த்தவாதத்தை அடிப்படையாகக்கொண்ட மூலோபாயக் கட்டமைப்பொன்றை பைடன் கொடுக்கின்றார் போலத்தோன்றுகிறது.

2001 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் 'பயங்கரரவாதம் மீதான உலகளாவிய போரை' முன்னெடுத்தார். ஒபாமா அதைத் தொடர்ந்தார். மேற்காசியாவில் ஈரானின் வல்லாதிக்கம் மீது குறிவைப்பதற்கு ட்ரம்ப் அதைப் பயன்படுத்தினார். ஆனால், உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது அமெரிக்காவின் பொறுப்பு என்று பைடன் நம்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் முக்கியமான தேசிய நலன் என்ன என்று அவர் ஆகஸ்ட் 30 கேட்டார். "எனது அபிப்பிராயப்படி எமக்கு ஒரேயொரு நலன் தான் இருக்கிறது ; எமது தாயகத்தின் மீது தாக்குதல் ஒன்றை தொடுப்பதற்கு மீண்டும் ஒருபோதும் ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்பட முடியாமல் இருப்பதை உறுதிசெய்வதே அதுவாகும்".உண்மையில், பைடனைப் பொறுத்தவரை, அமெரிக்க தாயகத்தின் மீது மேலும் தாக்குதல்களை தவிர்ப்பதன் மீது கவனத்தைக்குவித்த ஒரு போராக பயங்கரவாதம் மீதான  போரை அவர் மீள வியாக்கியானப்படுத்துகின்றார். இந்த அணுகுமுறை ஏனைய மோதல் களங்களில் இருந்து (குறிப்பாக, முஸ்லிம் உலகில் இருந்து) அமெரிக்காவை பின்வாங்க அனுமதித்து சீனாவின் எழுச்சியை கையாளுவதன் மீது மூலவளங்களை குவிக்க உதவும்.

ஒக்கஸ் கூட்டணி 

ஆப்கானிஸ்தானில் இருந்து படைவிலகல் அமெரிக்க வல்லமை மீது நம்பகத்தன்மை தொடர்பான கேள்வியைக் கிளப்பியது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் அதன் நேசஅணியை (காபூல் அரசாங்கத்தை) கைவிட்டுவிட்டது என்ற விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், பைடனின் புதிய யதார்த்த உலகில், ஆப்கான் அரசாங்கத்தை ஆதரிப்பதோ அல்லது தலிபான்களை எதிர்த்து ஒரு முடிவின்றி சண்டையிடுவதோ அமெரிக்காவுக்கு தேசிய பாதுகாப்பு நோக்கத்தில் எந்த வகையிலும் உதவப்போவதில்லை. ஆனால், சீனாவைக் கையாளுவது அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானது. ஏனென்றால், வளர்ந்துவரும் சக்திமிக்க சீனா அமெரிக்காவின் உலகளாவிய முதன்மைநிலைக்கு ஒரு சவாலாக அமையமடியும். சீனா ஏற்கெனவே இந்தோ பசுபிக்கில் ஒரு மேலாதிக்க நிலையை நிறுவிவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து படைவிலகலை முடித்த கையோடு பைடன் நிருவாகம் அதன் பேரார்வமிக்க புதிய கூட்டணியான 'ஒக்கஸை' ( Australia + United Kingdom + United States= AUKUS) அறிவித்தது.

சவால்கள்

பைடனின் கொள்கை அதன் முற்கட்டத்திலேயே இன்னமும் இருக்கிறது. அது ஏற்கெனவே பல சவால்களைச் சந்திக்கிறது. முதலாவதாக, அமெரிக்கா மாற்றுத் திட்டம் எதுவும் இல்லாமல் ஆசியப் பெருநிலப்பகுதியில் இருந்து விலகிக்கொள்கிறது.  சீனா உட்பட தனது  போட்டியாளர்களினால் நிரப்பப்படக்கூடிய வெற்றிடம் ஒன்றை  விட்டுச்செல்கிறது. இதற்கு  ஆப்கானிஸ்தானை உதாரணமாகச் சொல்லலாம். இரண்டாவதாக, பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவில்லை ; காபூல் விமான நிலையத்தில் ஆகஸ்ட் 26 குண்டுவெடிப்பு இதைக் காட்டுகிறது. அதனால் தொடர்ந்து பாதுகாப்பு சவால்கள் இருக்கவே செய்யும். மூன்றாவதாக, ஈரானின் அணுப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்து நீடிக்கிறது.ஈரானை முன்னைய அணு உடன்படிக்கைக்கு திரும்பிச்செல்ல வைப்பதற்கு ஊக்குவிப்பு எதுவும் இப்போது இல்லை.நான்காவதாக, சீனா பொருளாதார ரீதியில் பெருமளவு செல்வாக்ை, குறிப்பாக இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கொண்டிருக்கிறது.அமெரிக்கா ஒக்கஸின் ஊடாக அதன் பாதுகாப்பு பிரசன்னத்தையும் பற்றுறுதியையும் அதிகரிக்க முயற்சிக்கின்ற அதேவேளை, பிராந்தியத்தில் சீனாவுக்கு நிகராக பொருளாதாரச் செல்வாக்கை செலுத்த இயலாமல் இருக்கிறது அல்லது செலுத்த தயங்குகிறது.பசுபிக் வாணிப உடன்படிக்கையில் மீண்டும் இணைவதற்கு பைடன் நிருவாகத்திடமிருந்து எந்த முயற்சியும் இல்லை. அந்த உடன்படிக்கையில் இணைந்துகொள்வதற்கு சீனா இப்போது நாட்டம் கொண்டிருக்கிறது.

இறுதியாக, ஒக்கஸ் உடன்படிக்கை அத்திலாந்திக் கூட்டணிக்குள் விரிசல்களை தோற்றுவித்திருக்கிறது.ஒக்கஸ் தொடர்பான கடுமையான முதல் பிரதிபலிப்பு சீனாவிடமிருந்து அல்ல, அவுஸ்திரேலியாவுக்கு டீசல் நீர்மூழ்கிகளை விநியோகிப்பதற்கு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்த பிரான்ஸிடமிருந்தே வந்திருக்கிறது. அந்த உடன்படிக்கை இப்போது செயலிழந்துவிட்டது. தனக்கு முதுகில் குத்தப்பட்டுவிட்டதாக பிரான்ஸ் உணருகிறது.பைடன் ஏற்கெனவே புதிய திசைமார்க்கத்துக்கும் பழைய யதார்த்தங்களுக்கும் இடையிலான ஒரு மோதலைக் காண்கிறார்.

(த இந்து)