இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன்' படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடித்த பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.

1978ஆம் ஆண்டில் மலையாள சினிமாவின் நடிகராக அறிமுகமானவர் நெடுமுடி வேணு. 

இவர் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்னரே பல மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை வென்றிருக்கும் இவர், கேரள மாநில அரசின் விருது, பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார்.

இவர் தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போகிறோம்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

73 வயதாகும் நெடுமுடி வேணு அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் நேற்று அவர் உடல்நலம் சரி இல்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களும், கேரளத் திரை உலகத்தினரும், ஏனைய இந்திய திரை உலகத்தை சார்ந்தவர்களும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.