(எம்.எப்.எம்.பஸீர்)

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk

மிக நீண்ட பரிசீலனைகளின் பின்னர்,  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான  எஸ். துறை ராஜா, யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் மனுவை விசாரணைக்கு ஏற்று உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி,  இந்த மனுவுடன் தொடர்புபட்ட ஆட்சேபனைகள் இருப்பின்  அவற்றை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு மனுவின் பிரதிவாதிகளான சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் - 1 இன் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  குறித்த அமைச்சின் செயலர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

இந் நிலையில், குறித்த ஆட்சேபனைகளுக்கான தமது பதில்களை மனுதாரர் தரப்பு எதிர்வரும்  டிசம்பர் 19 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்த நீதிமன்றம் மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.