( எம்.எப்.எம்.பஸீர்)

ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்று காணாமல் போணதாக கூறப்படும் 14 வயதான பாடசாலை மாணவி  தம்புள்ளை - கலோகஹ எல பகுதியில் பாலடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை - கண்டளம டி.எஸ். சேனநாயக்க பாடசாலையில் 9 ஆம்  தரத்தில் கல்வி பயிலும், தம்புள்ளை - அத்துபாரயாய பகுதியைச் சேர்ந்த  புத்தினி பியுமாலி எனும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று ( 11) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

 பொலிஸ் தகவல்கள் பிரகாரம் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள குறித்த மாணவி, கடந்த 6 ஆம் திகதி தம்புள்ளை - ஹல்மில்லேவ, ஹபரத்தாவல பகுதியைச் சேர்ந்த நன்கு பரீட்சயமான குடும்பம் ஒன்றின் 7 வயது சிறுமிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவென அழைத்து  செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியும், அவரது சிறிய தந்தை என அறியப்படுபவருமான நபரும் மோட்டார் சைக்கிளில் வந்து இவ்வாறு குறித்த மாணவியை அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பாடம் சொல்லிக் கொடுக்க சென்ற தனது மகள் மீள வீடு வந்து சேராததால், அது தொடர்பில் தேடிப் பார்த்த போது எந்த தகவலும் கிடைக்காததால், எச்.ஏ. சந்ரா ஜயசேகர எனும் தாய் தனது மகளை காணவில்லை என தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 ஆம் திகதி முறைப்பாடளித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் தம்புள்ளை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ். கருணாதிலக உள்ளிட்ட குழு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந் நிலையிலேயே, தம்புள்ளை - கலோகஹ எல பகுதி பாலடைந்த வீடொன்றிலிருந்து துர்வாடை வீசுவதாக தம்புள்ளை பொலிசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார் அங்கு சென்று பார்த்த போது, யாரோ ஒருவரின் சடலம் கட்டில் மேல் கிடப்பது தெரியவரவே, அது தொடர்பில் தம்புள்ளை  நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது தம்புள்ளை நீதிவான் எம்.ஏ. அமானுல்லாஹ் ஸ்தலத்துக்கு சென்று பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த  பாலடைந்த வீட்டின் கட்டில் மேல் துணிகளால் சுற்றப்பட்டிருந்த  14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 சடலத்தின் ஆடைகள் அனைத்தும் கலையப்பட்டிருந்ததாக பொலிசார் இதன்போது அவதானித்துள்ளனர்.

இந் நிலையில்,  குறித்த சிறுமியை அழைத்து சென்ற நபரை பொலிஸார் தேடிப் பர்த்த போதும் அவரும் அவர் மனைவியும், மகளும் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

 சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.