(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு 2, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில், பள்ளிவாசல் வீதியில் வைத்து பொலிஸ் ஒற்றர் ஒருவரை தாக்கி, அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில், கொழும்பு மத்தி குற்ற விசாரணை பிரிவின்  உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரைக் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு, கொழும்பு மத்தி  வலய குற்ற விசாரணைப் பிரிவில் சேவையாற்றும்  ஒருவரைக் கைது செய்யவே இவ்வாறு சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, கொழும்பு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

 குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பிரிதொரு நபருடன் சென்று, கொம்பனி வீதி, பள்ளிவாசல் வீதியருகே வைத்து பொலிஸ் ஒற்றரை கழுத்தை பிடித்து தாக்கி, அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தாக்குதலின் போது பொலிஸ் ஒற்றர், கொழும்பு மத்தி 2 உதவி பொலிஸ் அத்தியட்சருக்கு அழைப்பெடுத்து நடப்பதை கேட்கச் செய்துள்ளதுடன், பின்னர் உதவி பொலிஸ் அத்தியட்சர் குறித்த உப பொலிஸ் பரிசோதகருக்கு எடுத்த அழைப்பினையடுத்தே  ஒற்றர் தாக்குதலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முன் வைக்கப்பட்டுள்ள குறித்த முறைப்பாடு தொடர்பில்,  கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  நிஷாந்த சந்ரசேனவின் அலோசனையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 குறித்த பொலிஸ் ஒற்றர் இதற்கு முன்னர்,  உப பொலிஸ்  பரிசோதகர் முன்னெடுக்கும் ஹொரோயின் வர்த்தகம் தொடர்பில், கொம்பனி வீதி பொலிஸ் பொறுப்பதிகாரி  உபுல் சமரசிங்க, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி நாலக குணசேகர ( தற்போது இருவரும் உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்) ஆகியோருடன் சென்று, கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிச் அத்தியட்சருக்கு முறைப்பாடுச் செய்துள்ளனர். அதனால்  கோபமடைந்த நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் குறித்த தாக்குதலை நடாத்தியுள்ளதாகசந்தேகிக்கும் பொலிசார் தண்டனைச்சட்டக் கோவையின் 314,316,373, 380,338 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கருதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.