(ஆர்.யசி)

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறைகளில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் , பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடனான சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் வலியுறுத்தியுள்ளார். 

பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய சட்ட திருத்தங்கள் இலங்கைக்கு அவசியம் என்ற காரணிகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைசர் சரத் வீரசேகரவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டனுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு நட்புறவு மற்றும் பாதுகாப்பு சார் காரணிகள் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறிப்பாக நீண்டகால ஒத்துழைப்பு செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு செயற்பாடுகள் குறித்து  இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமது தரப்பு காரணிகளை எடுத்துக்கூறியுள்ளார்.

அதேபோல் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், சட்ட ஒழுங்கை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறைகளில் ஏனைய சமூகத்தினரை இணைத்துக்கொண்டு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்துவது குறித்தும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் சில காரணிகளை முன்வைத்துள்ளார். 

மேலும் நாட்டின் அபிவிருத்தி விடயங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களுடன் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும், அதேபோல் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், பயங்கரவாத தடை சட்டத்த்தில் திருத்தங்களை முன்னெடுக்கப்படுவது குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக  பொலிஸ் சடங்களில் புதிய நடைமுறை சீர்திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

சந்திப்பு குறித்து அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில், நாட்டின் தற்போதைய நடைமுறைகள், நிகழ்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கமாக முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்தெல்லாம் பேசியிருந்தோம்.

அதேபோல் நீண்டகால நட்புறவை கொண்டுள்ள எம் இரு நாடுகளுக்கு இடையில் அடுத்த கால கட்டங்களில் அரசாங்கங்களுக்கு இடையில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் ஒத்துழைப்பு செயற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார், 

இந்த விடயத்தில் அரசாங்கம் மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது, நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது, அதே நேரத்தில் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் சட்டங்களை உருவாக்கி நாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்பதை நான் கூறியிருந்தேன், பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புபடும் நீதிப்பொறிமுறைகள் குறித்தும் பேசியிருந்தோம் என்றார்.