இருபதுக்கு - 20 உலக சம்பியனுக்கு பணப்பரிசு சுமார் 32 கோடி ரூபா

By Gayathri

10 Oct, 2021 | 07:32 PM
image

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு 31 கோடியே 98 இலட்சத்து 25,760 ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என ஐசிசி இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதில் சரியாக அரைவாசி பணப்பரிசான 15 கோடியே 99 இலட்சத்து 12.880 ரூபா பணப்பரிசு இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ளது.

அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடையும் இரண்டு அணிகளுக்கு தலா 7 கோடியே 99 இலட்சத்து 56,440 ரூபா பணப்பரிசு கிடைக்கும்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் அக்டோபர் மாதம் 17ஆம் திகதியிலிருந்து நவம்பர் 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகளுக்கும் ஒட்டுமொத்தமாக 111 கோடியே 93 இலட்சத்து 90,160 ரூபா பகிரப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்தது.

2016இல் நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் போன்றே சுப்பர் சுற்றில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் போனஸ் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது. 

சுப்பர் 12 சுற்றில் 30 போட்டிகளில் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 79 இலட்சத்து 95,644 ரூபா போனஸ் பரிசாக கிடைக்கும்.

சுப்பர் 12 லீக் சுற்றுடன் வெளியேறும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடியெ 39 இலட்சத்து 92,377 ரூபா கிடைக்கும்.

முதல் சுற்றுக்கான 12 போட்டிகளில் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 79 இலட்சத்து 95,644 ரூபா போனஸ் பரிசாக கிடைக்கும். முதல் சுற்றுடன் வெளியேறும் எட்டு அணிகளுக்கு தலா 52 இலட்சத்து 59,205 ரூபா வழங்கப்படும்.

முதல் சுற்றில் பங்களாதேஷ், அயர்லாந்து, நமிபியா, நெதர்லாந்து, ஓமான், பப்புவா நியூ கினி, ஸ்கொட்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் இரண்டு குழுக்களில் விளையாடவுள்ளன.

அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, நடப்பு உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. முதல் சுற்றிலிருந்து 4 சுப்பர் 12 சுற்றில் இணையும்.  

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right