(நெவில் அன்தனி)

மாலைதீவுகளில் நடைபெற்றுவரும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வெற்றியையாவது ஈட்டவேண்டும் என்ற தாகத்துடன் ஏங்கிக்கொண்டிருக்கும் இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் வரவேற்பு நாடும் நடப்பு சம்பியனுமான மாலைதீவுகளை இன்று பிற்பகல் எதிர்த்தாடவுள்ளது.

May be an image of 1 person and text that says "FOOTBALL CAPTAIN AFT 快 SRILANK STARTINGXI 1 SUJAN PERERA 3 HARSHA FERNANDO 4 DUCKSON PUSLAS 5 CHAMOD DILSHAN 6 CHARITHA RATHNAYAKE 7 KAVINDU ISHAN 10 DILLON DE SILVA 12 CHALANA CHAMEERA 13 WASEEM RAZEEK 15 MARVIN HAMILTON 17 JUDE SUPAN SUBS RUWAN, KAVEESH APPUHAMI. MUSHTAQ, FAZAL, AAKIB SUPUN, RIFKAN, AIZER, IGUARDO ASIKUR"

இப் போட்டி மாலே விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் இதுவரை ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு வெற்றிதோல்வியற்று முடிவு என்ற பெறுபேறுகளுடன் கடைநிலையில் இருக்கும் இலங்கை, இனிமேலும் இழக்க எதுவும் இல்லை என்பதால் இன்றைய போட்டியில் உயிரைக் கொடுத்து விளையாடும் என நம்பப்படுகின்றது.

தெற்காசிய கால்பந்தாட்ட வரலாற்றில் கடந்த இரண்டு தசாப்தங்களில் முதல் தடவையாக ஆட்டத்திறனை இலங்கை வெளிப்படுத்திவருவதன் காரணமாக இலங்கை அணிக்கு “தங்கப் படை” என்ற புணைப் பெயர் மாலைதீவுகளினால் சூட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆக்கிரமிப்பு ஆட்டத்திறனுடன் அதி உயரிய கால்பந்தாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய இலங்கை இன்றைய தினமும் கடும் முயற்சியுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்தியஸ்தரின் தவறால் பங்களாதேஷிடம் துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்த இலங்கை, நெபாளத்துடன் கடுமையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

சர்வதேச கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் 158ஆவது இடத்திலுள்ள மாலைதீவுகளை இலங்கை வெற்றிகொண்டால் தரவரிசையில் சில நிலைகள் உயரும்.

எவ்வாறாயினும் மாலைதீவுகளுடன் இதுவரை விளையாடப்பட்டுள்ள 12 சர்வதேச போட்டிகளில் ஒரு தடவையேனும் 90 நிமிட முழு ஆட்ட நேரத்தில் இலங்கை வெற்றிபெற்றதில்லை.

மாலைதீவுகளில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற தங்கக் கிண்ண இறுதிப் போட்டி வெற்றிதோல்வி முடிவடைந்த பின்னர் பெனல்டி முறையிலே வெற்றிபெற்றே இலங்கை சம்பியனாகியிருந்தது.

இதனைவிட மாலைதீவுகளுடன் 6 போட்டிகளில் இலங்கை தோல்வி அடைந்துள்ளதுடன் 5 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளது.

இந்த வரலாற்றை மாற்றி அமைத்து வெற்றி பெறும் நோக்கத்துடன் இன்றைய போட்டியில் மாலைதீவுகளை சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று வித்தியாசமான வியூக (4-1-4-1)அணுகுமுறையை இலங்கை பிரயோகிக்கவுள்ளது.

வழமைபோல் கோல் காப்பாளர் நிலையில் அணித் தலைவர் சுஜான் பெரேரா விளையாடவுள்ளார்.

பின்களத்தில் ஜூட் சுபன், சரித்த ரட்நாயக்க, டக்சன் பியூஸ்லஸ், ஹர்ஷ பெர்னாண்டோ, இடைமத்திய களத்தில் மார்வின் ஹெமில்டன், மத்திய களத்தில் சலன சமீர, வசீம் ராஸீக், கவிந்து டில்ஷான், டிலொன் டி சில்வா, முன்களத்தில் சமோத் டில்ஷான் ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாற்று வீரர்களாக ருவன் அருணசிறி, கவீஷ் லக்ப்ரிய பெர்னாண்டோ, ரொஷான் அப்புஹாமி, மொஹமத் முஷ்தாக், அசிக்கூர் ரஹ்மான், மொஹமத் பஸால், மொஹம்மத் ஷிபான், மொஹமத் ஆக்கிப், சுப்புன் தனஞ்சய, எடிசன் பிகராடோ, அமான் பைசர், ரிப்கான் மொஹம்மத் ஆகியோர் இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

தனது கடைசி லீக் போட்டியில் இன்று விளையாடும் இலங்கை அணி நாளைக் காலை அங்கிருந்து புறப்பட்டு நாடு திரும்பும் என தெரிவிக்கப்படுகின்றது.