ஜனாதிபதியிடம் இராஜினாமாக் கடிதத்தினை கையளித்தார் ஜீவன் : வடக்கு ஆளுநராக எதிர்வரும் வாரம் பதவியேற்பு ?

By Digital Desk 2

10 Oct, 2021 | 03:03 PM
image

ஆர்.ராம்

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடத்தில் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார்.

  

இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்படலாம் என்று ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுதந்தர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டிருந்த ஜீவன் தியாராவை அப்பதவியில் இருந்து இராஜினாமாச் செய்யுமாறு கோரும் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்ததோடு அதில் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜீவன் தியாகராஜா அப்பதவியில் இருந்து இராஜினாமச் செய்யும் கடிதத்தினை அனுப்பியுள்ளார். அத்துடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இறுதியாகப் பங்கெடுத்திருந்தார்.

  

அதேவேளை, தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் பீ.எஸ்.எம்.சாள்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதோடு அவருக்கு அடுத்த கட்டமாக வழங்கப்படவுள்ள நியமனங்கள் குறித்து இதுவரையில் உத்தியோக பூர்வமான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அதேபோன்று ஜீவன் தியாராஜாவின் இராஜாநாமாவினால் தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்படவுள்ள வெற்றியிடத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர் குறித்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right