ஆகஸ்ட் மாதத்தில் வொஷிங்டன் தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றிய பின்னர் அமெரிக்க அதிகாரிகள் ஆப்கானை ஆளும் தாலிபானை சந்தித்து முதல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சிரேஷ்ட தலிபான் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் தங்கள் நாடுகளின் உறவில் "ஒரு புதிய பக்கத்தைத் திறப்பது" பற்றி விவாதித்தார்கள்.

அவர்கள் கட்டாரில் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள் என்று ஆப்கானிஸ்தானின் உயர் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று கட்டார் தலைநகர் டோஹாவில் தொடங்கிய தனிப்பட்ட சந்திப்புகள், ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு இடம்பெற்ற முதல் சந்திப்பாகும்.

ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியின் இருப்பு மீதான தடையை நீக்குமாறு ஆப்கானிஸ்தான் தூதுக்குழு அமெரிக்காவிடம் இந்த கலந்துரையாடலின்போது கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் கொவிட் -19 க்கு எதிரான ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் இதன்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து தலிபான் குழு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகளின் வெளியேறலானது 20 வருட இராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றவும் மீண்டும் வழியமைத்தது.