மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில்  சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது  மன்னார் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் வைத்து டிப்பர்  வாகனத்தினால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

குறித்த டிப்பர் வாகனம் மோதியதில் மன்னார் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் நின்ற 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து திட்டம் இட்டு இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த விபத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவே இடம் பெற்றுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

மன்னார் பொலிஸ் நிலையத்தில்  இன்று காலை 10 மணியளவில் சரணடையச்   சென்ற இளைஞர்களே குறித்த விபத்துக்குள்ளானதுடன் சில தினங்களுக்கு முன்னதாக இடம் பெற்ற முரண்பாடு சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொண்டு சரணடைய சென்ற ஐந்து இளைஞர்களே பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை எற்படுத்திய டிப்பர் மற்றும் சாரதி தப்பி சென்று நிலையில் டிப்பர் மற்றும் சாரதியை தேடும் பணி மன்னார் பொலிஸாரால் இடம் பெற்று வருகின்றது.

குறித்த விபத்து நன்கு திட்டமிடப்பட்ட விபத்து எனவும் விபத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் பண பலத்தை பயன்படுத்தி  விபத்துக்கான காரணத்தை திசை திருப்புவதற்கான வாய்புக்கள் அதிகம் இருப்பதால் பொலிஸார் உரிய விதத்தில் விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமா பாணியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவே முறைப்பாடு செய்து சரணடைய சென்றவர்கள் மீது  விபத்தை ஏற்படுத்திய சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.