(எம்.மனோசித்ரா)

கொரோனா  தொற்றுறுதியான கர்ப்பிணிகள் தொற்றிலிருந்து குணமடைந்து சுமார் 4 வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

இவை தொடர்பில பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான வைத்தியர்களின் ஆலோசனை பெறுவது அவசியமாகும் என காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.

கொரோனா  தொற்றுக்குள்ளான கர்பிணிகளுக்கு ஏற்படும் இவ்வாறான அறிகுறிகள் தொடர்பில் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கொரோனா  தொற்றுறுதியான கர்ப்பிணிகள் தொற்றிலிருந்து குணமடைந்து சுமார் 4 வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், உடல் வலி, தலை வலி போன்ற சில அறிகுறிகள் ஏற்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின்னரான இந்த அறிகுறிகள் 6 மாதங்கள் வரை காணப்படும். எனினும் இது பாரதூரமான நிலைமை அல்ல.

எவ்வாறிருப்பினும் இது போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் துரிதமாக பிரசவ மற்றும் நரம்பியல் தொடர்பான வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கர்ப்பிணிகளை அறிவுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.