எம்.மனோசித்ரா

நாட்டில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலுக்கான தயார்படுத்தல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , அதற்கு தேவையான தடுப்பூசி தொகைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கலில் முன்னணியிலுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதோடு , தடுப்பூசி வழங்கலோடு கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளிலும் உலகலாவிய ரீதியில் இலங்கை முதன்மை வகிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கலின் முக்கியத்துவம் மற்றும் கொவிட் தொற்றிலிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என்பது தொடர்பான விழிப்புணர்வு காணொளியின் அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதோடு , முழு சனத்தொகையில் 55 சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

20 - 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் சுமுகமாக இடம்பெற்று வருவதோடு , அவற்றில் எதிர்பார்த்த இலக்கினை அடைய முடிந்துள்ளது.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போதிலும் , தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதும் அத்தியாவசியமானதாகும்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் அதே வேளை பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் அத்தியாவசியமானதாகும் என்று தெரிவித்தார்.