டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு  

By Gayathri

08 Oct, 2021 | 04:03 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே கட்சியின் கொள்கைகளுக்குப் புறம்பாகச் செயற்பட்டமை நிரூபனமாகியுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

டயானா கமகே கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் ஆசனத்தின் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பின்போது டயானா கமகே கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக அச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

எனவே அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயற்பட்டதாகக்கூறி, கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்குழுவினால் அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணைகளுக்காக டயானா கமகேவிற்கு 5 தடவைகள் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ஒருமுறையேனும் சமுகமளித்திருக்காத நிலையில், அக்குழுவின் பரிந்துரை அறிக்கை நேற்று வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி ஒழுக்காற்று விசாரணைக்குழுவின் பரிந்துரைகளை ஏகமனதாக ஏற்றுக்கொண்ட செயற்குழு, டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்குத் தீர்மானித்ததுடன், அதனை இன்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right