கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை எழுதி விட்டு வழமை போன்று நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் மற்றவர் மீது மை வீசி மகிழ்ச்சியை கொண்டாடிய மாணவர்கள் மீது தாக்குதல்  நடாத்தப்பட்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளான நேற்று மாலை பரீட்சை முடிந்து வீதிக்கு வந்த மாணவர்கள் மை வீசி தமது பரீட்சை நிறைவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அவ்வீதியால் வந்த சிலர் இம்மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள் வைதியாலையில் அனுமதிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலுக்கு இலக்காகிய முஹம்மது அதாயி மற்றும் எம்.லப்ரி ஆகிய இருமாணவர்களுமே காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரீட்சை இறுதி நாள் என்பதனால் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் வழமை போன்று ஒருவருக்கொருவர் மையடித்து கொண்டிருந்த வேளை வீதியால் சிகப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மேலும் சிலர் எங்கள் மீது சாரமாரியாக தாக்குதலை மேற் கொண்டு விட்டு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்ததோடு தாங்க  முடியாத வலியின் காரணமாகவே எமது ஏனைய மாணவர்கள் மூலம் தாங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.