ஓமானை தோற்கடித்தது இலங்கை

08 Oct, 2021 | 07:33 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஓமான் மற்றும் இலங்கை  கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை 19  ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

ஓமான் தலைநகர் மஸ்கட்டின் அல் அமரெட்டில் அமைந்துள்ள  அல் அமரெட்டில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

Image

இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ‍ ஆகிய இருவரும் சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.  

கடைசி வரை ஆட்டமிழக்காதிருந்த  இந்த ஜோடி தமக்கிடையில் பிரிக்க முடியாத  111 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது. நான்காம் இலக்க வீரராக  களமிறங்கிய அவிஷ்க 59 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் அடங்கலா ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை பெற்றார். 

மறுமுனையில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக்க 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றார்.

முன்வரிசையில் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்தமால், குசல் மெண்டிஸ் இருவரும் ஓட்டமெதுவும் பெறாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

அதைத் தொடர்ந்து ஆரம்ப வீரராக களமிறங்கியிருந்த பெத்தும் நிஸ்ஸங்க (8) பானுக்க ராஜபக்ச (15) சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர்.

பந்துவீச்சில் ஓமான் அணி  சார்பில் பயாஸ் பட் 2  விக்கெட்டுக்களையும், கலீமுல்லாஹ் மற்றும் கவார் அலி தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களில்  8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

ஓமான் அணியின்  துடுப்பாட்டத்தில்  8 ஆம் இலக்க வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நஸீம் கூஷி  22 பந்துகளில் 4 சிக்ஸர்கள்  2 பவுண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களை பெற்று போட்டியின் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தவிர மொஹமட் நதீப் (32), அயான் கான் (23), சந்தீப் கவூட் (17) ஆகிய மத்திய வரிசை வீரர்கள் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர். பந்துவீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப், சாமிக்க கருணாரட்ண தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணி தனது கடைசி இரண்டு ஓவர்களில் 41 ஓட்டங்களை பெற்றிருந்தமை  இந்தப் போட்டியில் இலங்கை  ஈட்டிய வெற்றிக்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

இலங்கை ஈட்டிய இந்த வெற்றியை  பெரிதாக பாராட்டத்தக்க வெற்றியாக கருத முடியாது. இது இலங்கை அணி  போராடி வென்ற போட்டியாகும்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசியும் இரண்டாவதுமான போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி  இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right