அகில உலகம் புகழ்பெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் கேட்டதை அள்ளிக்கொடுக்கும்  தேவி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் சுமார் 6 தலைமுறையாக நடத்தி வரும் இத்திருவிழா தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும், அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதியம்மனுக்கும், மகன் வைரவருக்கும் கடந்த 28 வருடங்களாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி  மாலை தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 

இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை  காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை இறைபக்தியுடன் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அத்தினத்தினை மேலும் சிறப்பிக்கும் வகையில் மணிசங்கரம்மாள் வில்லிசை நிகழ்ச்சியும் அரங்கேறியது. 

இந்நிலையில் நேற்று  அதிகாலை 5 மணியளவில்  21அடி நீளம்  கொண்ட பூக்குழியில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.  இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்குபற்றினர்.  

பின்னர் மஞ்சள் நீராட்டும் தொடர்ந்து அம்மனுக்கு மகா சிறப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவைக்காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 தை மாதத்திலும் குறித்த மூன்று நாள் திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.