(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கம்  தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், அதற்கான  நடவடிக்கையே தேருநர்களை பதிவு செய்தல் திருத்த சட்ட மூலம் எனவும் குற்றம் சாட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஐம்பது வீத அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இன்று  வியாழக்கிழமை, தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்  மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

13 ஆவது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு 33 வருடங்களாகிவிட்டன. இந்த திருத்த சட்டம் மூலம் அப்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஐம்பது வீத அதிகாரங்கள் இப்போது மீண்டும் பறிக்கப்பட்டு விட்டன.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டுவந்த 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலையிலேயே இலங்கை அரசுகளும் இந்திய அரசுகளும் உள்ளன. இந்த திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த 33 வருடங்களாக  ஏன் முடியவில்லை என்ற கேள்வியை இலங்கை-இந்திய அரசுகளிடம் முன்வைக்கின்றேன்.

நாட்டின் ஏனைய மாகாணங்களின் நிலை வேறு .வடக்கு,கிழக்கு மாகாணங்களின் நிலை  வேறு.  எமது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் குடியேற்றங்கள் ,நில அபகரிப்புக்களை மாகாணசபை அதிகாரங்கள் மூலமே கட்டுப்படுத்த முடியும்.

எனவே   உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் படி எமது கட்சி சார்பாக அரசிடம் கோருகின்றேன் என்றார்.