புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிவரை குறித்தப் பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நடராஜா ரவிசந்திரன்  நீதிமன்ற பிடியாணையின் கீழ் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த போது நேற்று முன்தினம்(17) தற்கொலை செய்துகொண்டார்.

குறித்த நபர் தான் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்த பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டதால் நேற்று அங்கு பதற்ற நிலை நீடித்தது.

இதனையடுத்து உடனடியாக இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் உள்ள அனைத்து பொலிஸாரையும் இடமாற்ற வேண்டும் என பொதுமக்கள் நேற்று மாலை 3 மணிவரை கண்டி நுவரெலியா வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு இன்று மாலை 3 மணிக்கு இறுதிகிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நல்லடக்கம் செய்யும் முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ போராட்டங்;கள் நடாத்த முடியாது என தடை உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது.